Disqus Shortname

இயந்திர நடவில் விவசாயிகள் ஆர்வம்

உத்திரமேரூர் :
விவசாயத்திற்கு, ஆட்கள் பற்றாக்குறையால் இயந்திரத்தின் மூலம் நடவு செய்யும் முறை, கிராமங்களில் அதிகரிக்க துவங்கி உள்ளது.பருவ மழையால் ஏரிகள் நிரம்பியதை அடுத்து, உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட கிராமங்களில், விவசாய பணிகள் தீவிரமடைந்துள்ளன. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் மற்றும் தொழிற்சாலைகள் அதிகரிப்பு போன்றவற்றால் தற்போது விவசாய பணிக்கு, ஆட்கள் பற்றாக்குறை நிலை ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, நாற்றுகளை நடவு செய்வதற்கு கூலியை உயர்த்தி கொடுப்பாக கூறி தேடி பிடித்தாலும், ஆட்கள் கிடைக்காத நிலை நிலவுவதாக விவசாயிகள் புலம்பி வருகின்றனர். இந்நிலையில், கிராமப்புற விவசாயிகள் பெரும்பாலானோர், இயந்திரத்தின் மூலம் நடவு செய்யும் முறைக்கு மாறி உள்ளனர்.

இதுகுறித்து, அருங்குன்றம் பகுதி விவசாயிகள் கூறியதாவது:நடவு இயந்திர உரிமையாளர்கள், உற்பத்தி செய்த நாற்றுகளை கொண்டு வந்து ஏக்கருக்கு, 5,000 ரூபாய் வீதமும், நாற்றுகள் உற்பத்தி செய்து வைத்துள்ள விவசாயிகளிடம் ஏக்கருக்கு, 3,000 ரூபாய் வீதம் எனவும், நடவு செய்து தருகின்றனர். செலவு சற்று கூடுதலானாலும் நடவு இயந்திரத்தின் மூலம் தரமாகவும், விரைவாகவும் பணியை நிறைவு செய்ய முடிவது திருப்தி ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர்கள் கூறுகின்றனர்.

No comments