Disqus Shortname

உத்திரமேரூர் அருகே அரசு பஸ் சிறை பிடித்து மாணவர்கள் சாலை மறியல்

உத்திரமேரூர் அருகே அரசு பஸ் தாமதமாவதை கண்டித்து பஸ்சை சிறைபிடித்து மாணவர்கள் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.உத்திரமேரூர் அடுத்த நெற்குன்றத்தில் இருந்து காஞ்சிபுரத்துக்கு தினமும் காலை, மதியம், மாலை என 3 முறை தடம் எண் 7 அரசு பஸ் இயக்கப்பட்டு வருகிறது. 17 கிமீ தூரம் கொண்ட இந்த வழியில் பஸ்சில் சென்று ஆனம்பாக்கம், நீர்குன்றம், பட்டா, புலிபாக்கம், அருங்குன்றம், திருமுக்கூடல், பழைய சீவரம் ஆகிய கிராமங்களை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் வாலாஜாபாத், திருமுக்கூடல் ஆகிய பள்ளிகளில் படித்து வருகின்றனர். இந்த பஸ், சில நேரங்களில் வாரத்துக்கு 2, 3 நாட்கள் மட்டுமே இயக்கப்படுகிறது.

அதுவும் சில நாட்களில் தாமதமாக இயக்கப்படுகிறது. இதனால் பள்ளிகளுக்கு குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் கிராமங்களை சேர்ந்த மாணவர்கள் கடும் அவதிக்குள்ளாகின்றனர்.இந்நிலையில் இன்று காலை ஆனம்பாக்கம் கிராமத்தில் அரசு பஸ் வந்தபோது சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரம் ஆனபிறகும் அதிகாரிகள் வரவில்லை. இதையடுத்து டிரைவர், கண்டக்டருடன் பொதுமக்களே பேச்சுவார்த்தை நடத்தி மறியலை கைவிட செய்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments