Disqus Shortname

கிடப்பில் உள்ள புதிய குடிநீர் திட்டம் : உத்திரமேரூர் பகுதிவாசிகள் கவலை

உத்திரமேரூர் ஜன-12
 உத்திரமேரூர்: உத்திரமேரூர் பகுதியில், புதிய குடிநீர் திட்டத்தை நிறைவேற்ற, தீர்மானம் நிறைவேற்றப்பட்டு 6 மாதங்களாகியும், அதற்கான பணிகள் துவங்கப்படாததால், கோடைக்கால குடிநீர் பிரச்னை குறித்து, அப்பகுதிவாசிகள் தற்போதே கவலையடைய துவங்கிவிட்டனர்.

குடிநீர் தட்டுப்பாடு


உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட 18 வார்டுகளில். 35 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதிவாசிகளின் குடிநீர்த் தேவைக்கு, வெங்கச்சேரி செய்யாற்று படுகையில் ஆழ்துளை கிணறு அமைத்து, குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. கோடை காலங்களில், வெங்கச்சேரி செய்யாற்று படுகையில், நிலத்தடி நீர்மட்டம் குறைவதால், ஆண்டுதோறும் அச்சமயங்களில் உத்திரமேரூர் பகுதியில், கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இந்நிலையில், கடந்த 2013 ம் ஆண்டில் பருவமழையின் அளவு மிகவும் குறைந்ததால், கடந்த ஆண்டு கோடை காலத்தின்போது, உத்திரமேரூர் பகுதிக்கு தேவையான 18 லட்சம் லிட்டர் தண்ணீர், செய்யாற்று குடிநீர்த் திட்டம் மூலம் கிடைக்கவில்லை. 5 லட்சம் தண்ணீர் மட்டுமே கிடைத்தது. இதனால், அப்பகுதியில் கடுமையான குடிநீர்த் தட்டுப்பாடு நிலவியது.

இதனை தொடர்ந்து, அடுத்து வரும் கோடை காலத்திற்குள், குடிநீர்ப் பிரச்னையை சமாளிக்க, உத்திரமேரூர் பகுதிக்கு, புதிய குடிநீர்த் திட்டம் ஏற்படுத்த தீர்மானிக்கப்பட்டது. அதன்படி, உத்திரமேரூர் ஏரியில், ஆழ்துளை கிணறு அல்லது திறந்தவெளி கிணறு அமைத்து, அதன் மூலம் குடிநீர் வினியோகிக்க, கடந்த ஜூலை மாதம் நடந்த பேரூராட்சி கூட்டத்தில், தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கான பணிகள் இன்று வரை மேற்கொள்ளப்படவில்லை.

ரூ .1.38 கோடி தேவை

வருகிற கோடை காலத்தில் ஏற்படும் குடிநீர்ப் பிரச்னை குறித்து, அப்பகுதிவாசிகள் தற்போதே கவலையடைந்துள்ளனர். இதுகுறித்து, பகுதிவாசிகள் கூறுகையில், 'கடந்த ஏப்ரல், மே, ஜூன் மாதங்களில், பத்து நாட்களுக்கு ஒரு முறை, குடிநீர் வினியோகிக்கப்பட்டது. இதனால், மிகவும் அவதிப் பட்டோம். இம்முறை பருவமழையின் அளவு, கடந்த ஆண்டைவிட வெகுவாக குறைந்துள்ளது. இதனால், கோடைகால குடிநீர்ப் பிரச்னையை சமாளிக்க, பேரூராட்சி நிர்வாகம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை, இப்போதே மேற்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் 'என்றனர். உத்திரமேரூர் பேரூராட்சி தலைவர் சுமதி கூறுகையில், '' உத்திரமேரூர் ஏரியில், புதிய நீர் ஆதாரம் ஏற்படுத்த ஒரு கோடியே 37 லட்சம் ரூபாயில் மதிப்பீடு தயார் செய்து, அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். அரசு நிதி ஒதுக்கீடு செய்யும் பட்சத்தில், அதற்கான பணி துவங்கப்பட்டு வருகிற கோடைகாலத்திற்குள் பணி முடித்து, குடிநீர் பிரச்னையை சமாளிக்க முடியும், '' என்றார்.

No comments