Disqus Shortname

அதிகாரிகளை முற்றுகையிட்டு பொதுமக்கள் சரமாரி கேள்வி: மேனலூர் ஊராட்சியில் பரபரப்பு

 உத்திரமேரூர் ஜன, 31: 
உத்திரமேரூர் அடுத்த மேனலூர் ஊராட்சிக்கு உட்பட்ட மேனலூர், காட்டுப்பாக்கம், கல்யாணமேடு, பாரதிபுரம், காந்திநகர், விக்கிரமநல்லூர், மேனலூர் காலனி ஆகிய கிராமங்களில் சுமார் 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த கிராமங்களுக்கான மக்களை தேடி வருவாய் திட்ட முகாம், மேனலூர் பஞ்சாயத்து அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது.காலை 10 மணிக்கு முகாம் துவங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், 11 மணிக்கு பிறகு அதிகாரிகள் வந்தனர். சுமார் 11.30 மணியளவில் தாசில்தார் பேபிஇந்திரா வந்தார். அதன் பிறகு முகாம் தொடங்கியது. அப்போது, அங்கு வந்த பொதுமக்கள், 30 பேருக்கு முதியோர் உதவி தொகை வழங்க அப்போதைய தாசில்தார் கிரிஜா உத்தரவிட்டார். ஆனால், இதுவரை உதவி தொகை வழங்கவில்லை. இதை பற்றி தாசில்தார் அலுவலகத்தில் கேட்டால், முறையான பதில் அளிக்காமல் அங்குள்ள அதிகாரிகள் அலைக்கழிப்பதாக புகார் கூறினர்

.திடீரென அதிகாரிகளை மக்கள் முற்றுகையிட்டனர். ' இன்று (நேற்று) மக்களை தேடி வருவாய் திட்ட முகாம் நடப்பதை, விஏஓ மற்றும் தலையாரி ஆகியோர் எவ்வித தகவலும் தெரிவிக்கவில்லை. விஏஓவிடம், கிராம மக்கள் மனு கொடுத்தால், அதன் மீது எவ்வித நடவடிக்கையும் எடுப்பதில்லை. அவரை, அவருக்காக ஒதுக்கிய அலுவலகத்தில் பார்க்க முடிவதில்லை. உத்திரமேரூர் பகுதியில் அறை எடுத்து தங்கி யுள்ளார். பெரும்பாலும், அங்கு வரவழைக்கிறார். இதனால், விஏஓவை உடனடியாக மாற்ற வேண்டும்'  என கோஷமிட்டனர். பின்னர், இதுவரை கொடுத்த மனுக்களுக்கே எவ்வித நடவடிக்கையும் இல்லை. இப்போது கொடுக்கும் மனுக்களுக்கு எப்படி வேலை நடக்கும் என கூறிவிட்டு அங்கிருந்து அனைவரும் சென்றுவிட்டனர்.

இதுபற்றி விஏஓ தசரதனிடம் கேட்டபோது, 'நாங்கள் கிராமங்களுக்கு சென்று, பொதுமக்களிடம் வருவாய் திட்ட முகாம் நடைபெறுவதை அறிவித்தோம். ஆனால், அவர்கள் 100 நாள் வேலைக்கு சென்றுவிட்டனர்' என்றார்.பொதுமக்கள் கூறுகையில், 100 நாள் வேலை திட்டம் நடந்து 6 மாதம் ஆகிறது. இப்போது நாங்கள் சும்மாவே இருக்கிறோம். இப்போது நாங்கள் வேலைக்கு சென்றதாக பொய் கூறும், விஏஓ தசரதன், அதற்கான பணத்தை தருவதற்கு தயாராக இருக்கிறாரா என கேள்வி எழுப்பினர். பெயரளவில் நடந்த வருவாய் திட்ட முகாமினால், மேனலூர் ஊராட்சியில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

No comments