Disqus Shortname

உத்தரமேரூர் அரசுக் கல்லூரியில் ஆசிரியர் நியமனம் எப்போது?

காஞ்சிபுரம் ஜன.03
 உத்தரமேரூர் அரசு கலைக் கல்லூரியில் போதிய ஆசிரியர்கள் இல்லை என்ற குற்றச்சாட்டு மாணவர்களிடையே எழுந்துள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், உத்தரமேரூர் அருகே திருப்புலிவனத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 13-ஆம் தேதி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தொடங்கப்பட்டது.இளநிலை தமிழ், இளநிலை ஆங்கிலம், இளநிலை கணிதம், இளநிலை வணிகம், இளநிலை கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் 244 மாணவர்கள் சேர்க்கப்பட்டனர்.இவர்கள் அனைவரும் உத்தரமேரூர், மதுராந்தகம் மற்றும் அதன் சுற்றுப்பகுதி கிராமங்களைச் சேர்ந்தவர்கள் ஆவர்.
இக்கல்லூரியில் தமிழ், ஆங்கிலம், வணிகவியல், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களுக்கு தலா 3 பேராசிரியர்கள் நியமிக்கப்பட வேண்டும்.ஆனால் தற்போது தமிழ், கணிதம், கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் தலா 1 பேராசிரியர், வணிகவியல் பாடத்துக்கு 2 பேராசிரியர் வீதம் 5 பேராசிரியர்கள் மற்றும் ஒரு முதல்வர் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர்.முக்கிய மொழிப்பாடமான ஆங்கிலத்துக்கு 1 பேராசிரியர் கூட இல்லை. இளங்கலைப் பிரிவில் வரும் அனைத்துப் பிரிவு படிப்புகளிலும் ஆங்கிலம் கட்டாயப் பாடமாகும்.அது தவிர, இளங்கலை ஆங்கிலம் என்ற ஒரு தனிப்பிரிவே உள்ள நிலையில் அப்பாடத்துக்கு ஒரு பேராசிரியர் கூட நியமிக்கப்படாதது கிராமப் பகுதி மாணவர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.இவ்வாறு ஆசிரியர்களே இல்லாமல் இம்மாணவர்கள் முதலாம் பருவத்தேர்வை எழுதி முடித்துள்ளனர். இப்போது 2-ஆம் பருவத்தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.இது குறித்து அக்கல்லூரியில் இளங்கலை ஆங்கிலம் படிக்கும் உத்தரமேரூரைச் சேர்ந்த மாணவிகள் கூறியது: எங்கள் பகுதியில் அரசு கலைக்கல்லூரி தொடங்கப்பட்டது, எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.ஆனால் கல்லூரி 3 மாதம் தாமதமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆங்கில மொழி எடுத்து படிக்கும் எங்களுக்கு பாடத்தைக் கற்பிக்க ஆங்கில பேராசிரியர் நியமிக்கப்படவில்லை. ஆங்கில பேராசியர்கள் இல்லாமலேயே, முதல் பருவத்தேர்வுக்கு தயாரானோம்.
தேர்வுக்கு 10 நாள்களுக்கு முன்பு செங்கல்பட்டிலிருந்து பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு பாடங்கள் நடத்தப்பட்டது. இதனால் முதல் பருவத்தேர்வில் 30 சதவீத கேள்விக்கு கூட எங்களால் பதில் எழுத முடியவில்லை.இந்நிலையில் இதுவரை ஆங்கிலப் பாடத்துக்கு பேராசிரியர்கள் நியமிக்கப்படவில்லை. இதனால் எங்களது நிலை கேள்விக்குறியாகியுள்ளது. தமிழக அரசு இதில் தலையிட்டு உடனடியாக பேராசிரியர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவிகள் கூறினர்.

No comments