Disqus Shortname

ஆட்சியரிடம் மனு கொடுக்க மாட்டு வண்டியில் வந்த எம்.பி.

உத்தரமேரூர் ஜன 20:
 மக்கள் குறைதீர் கூட்டத்துக்கு மாட்டு வண்டியில் வந்த பி.விஸ்வநாதன் எம்.பி., மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து மனு அளித்தார்.  
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஓடும் பாலாறு, செய்யாறு, வேகவதி ஆகிய ஆறுகளில் மணல் அள்ள மாட்டு வண்டித் தொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டிருந்தது. ஆனால் இதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதாக தொடர்ந்து புகார் வந்த வண்ணம் இருந்தது. மேலும் சென்னை உயர்நீதிமன்றத்தில் மணல் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் மாவட்டத்தில் உள்ள ஆறுகளில் மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் ஓராண்டுக்கு தடை விதித்துள்ளது. மாட்டு வண்டித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை காக்கும் வகையில் ஆறுகளில் மணல் அள்ள மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வந்தனர். கடந்த ஜனவரி 11-ஆம் தேதி உத்தரமேரூரில் நடந்த காங்கிரஸ் கட்சி நிகழ்ச்சியில் கலந்து கொள்ள பி. விஸ்வநாதன் சென்றிருந்தார். அப்போது அவரை சந்தித்த மாட்டுவண்டித் தொழிலாளர்கள், மணல் அள்ள அனுமதி பெற்றுத் தருமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.
இந்நிலையில் திங்கள்கிழமை திருக்கழுக்குன்றம், செங்கல்பட்டு, உத்தரமேரூர், காஞ்சிபுரம் உள்பட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 750 மாட்டுவண்டித் தொழிலாளர்களுடன் காஞ்சிபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் பி.விஸ்வநாதன், ஆட்சியரைச் சந்தித்து மனு அளிக்க வந்தார். அவர் வந்த மாட்டு வண்டியை அவரே ஓட்டி வந்தார். அவருடன் மாவட்டத் தலைவர் எஸ்.என்.எல். விஜயகுமார் உள்ளிட்டோரும் உடன் வந்தனர்.  மக்கள் குறைதீர் கூட்டம் நடைபெறும் அரங்கம் வரை மாட்டு வண்டியில் வந்த பி. விஸ்வநாதன், ஆட்சியரை நேரில் சந்தித்து, மாட்டு வண்டித் தொழிலாளர்களின் பிரச்னைகளை மனுவாக அளித்தார். அதைப் பெற்றுக் கொண்ட ஆட்சியர் கா. பாஸ்கரன், பரிசீலிப்பதாக கூறினார்.

No comments