Disqus Shortname

உத்திரமேரூர் கோயில் கொள்ளையில் 4 சிறுவர்கள் சிக்கினர்

உத்தரமேரூர் ஜன,10:
  உத்திரமேரூர் அடுத்த அரசாணி மங்கலம் கிராமத்தில் 200 ஆண்டு பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் கடந்த 2007ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்த கோயிலில் அர்ச்சகராக பாலாஜி (40) என்பவர் உள்ளார்.
கடந்த 2ம் தேதி வழக்கம்போல் கோயிலை திறக்க பாலாஜி சென்றார். அங்கு கோயில் கதவு திறந்து இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது விசாலாட்சி அம்மன் கழுத்தில் இருந்த 4 கிராம் நகை, அருகில் இருந்த உண்டியல் குடம் மாயமானதை கண்டு அதிர்ச்சியடைந்தார். காணிக்கை உண்டியல் குடத்தில் சுமார் ரூ.3 லட்சம் இருக்கும் என   கூறப்படுகிறது.இதே ஊரில் காளியம்மன் கோயிலில் இருந்து  18 கிராம் தங்க நகையும், அங்கிருந்த உண்டியலை உடைத்து அதிலிருந்த பணமும் கொள்ளை போனது. இச்சம்பவங்கள் குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் அரசாணி மங்கலம் கிராமத்தை சேர்ந்த 15 வயது சிறுவர்கள் 4 பேர் ஏரியில் மறைவான பகுதியில் கோயிலில் மாயமான காணிக்கை குடத்தை உடைத்து கொண்டிருந்தனர். இதை பார்த்த பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சிறுவர்கள் 4 பேரை பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்தனர். சம்பவம் தொடர்பாக சிறுவர்களிடம் தீவிரமாக விசாரிக்கின்றனர்.
 இதில் ஒரு சிறுவன் கடந்த 6 மாதத்துக்கு முன்பு செல்போன் கடையில் திருடிய வழக்கில் போலீசாரிடம் சிக்கியது குறிப்பிடத்தக்கது.

No comments