Disqus Shortname

பயன்பாட்டுக்கு வராததால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிய ரேஷன் கடை

பயன்பாட்டுக்கு வராத ரேஷன் கடை.
உத்திரமேரூர், மார்ச் 22:
உத்திரமேரூர் பேரூராட்சி 8வது வார்டு மற்றும் 11வது வார்டில் உள்ள முத்துகிருஷ்ணா அவென்யூ, கெங்கையம்மன் கோயில் தெரு, கீழாண்டை மற்றும் மேலாண்டை கொல்லை மேட்டு தெரு, செங்குந்த பிள்ளையார் கோயில் தெரு, வெள்ளை செட்டி தெரு, கிண்டி வெங்கட்டைய்யா பிள்ளை தெரு, கீழ்வெங்கடாசாரி தெரு, கண்ணதாசன் தெரு ஆகிய தெருக்களில் சுமார் 600க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர்.
மேற்கண்ட பகுதி மக்கள், செங்குந்த பிள்ளையார் கோயில் தெருவில் உள்ள ரேஷன் கடையில் பொருட்கள் வாங்கி வருகின்றனர். முத்துக்கிருஷ்ணா அவென்யூ, கீழாண்டை கொல்லை மேட்டு தெரு, கெங்கையம்மன் கோயில் தெரு ஆகிய பகுதிகளில் வசிக்கும் 300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது. இதனால், தங்களுக்கு வசதியாக அருகில் புதிய ரேஷன் கடை அமைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இதையடுத்து, எம்எல்ஏ நிதி 5 லட்சத்தில் முத்துகிருஷ்ணா அவென்யூ பகுதியில் புதிதாக ரேஷன் கடை, கடந்த 2012 டிசம்பர் மாதம் கட்டி முடிக்கப்பட்டது. அதை தொடர்ந்து விமர்சையாக திறப்பு விழா நடந்தது. அதன்பின், மக்கள் பயன்பாட்டுக்கு ரேஷன் கடை திறக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படாததால், இந்த கட்டிடம் வீணாவதோடு, சமூக விரோதிகளுக்கு இலவச பாராக மாறிவிட்டது.
இது குறித்து வட்ட வழங்கல் அதிகாரிகளிடம் கேட்டபோது, எம்எல்ஏ நிதியில் ரேஷன் கடை திறக்கப்பட்டது. ஆனால், அதனை பயன்படுத்துவதற்கு, பேரூராட்சி நிர்வாகத்தினர் இதுவரை அனுமதி வழங்கவில்லை என்றனர்.
பேரூராட்சி அதிகாரிகள் கூறுகையில், புதிதாக கட்டப்பட்ட கட்டிடத்தை, திறப்பு விழா முடிந்ததும், ரேஷன் கடை நடத்த ஒப்படைத்துவிட்டோம். ஆனால், அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள், மெத்தனமாக உள்ளனர் என ஒருவரை பற்றி ஒருவர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
எனவே, பொதுமக்கள் நலனுக்காக கட்டப்பட்ட ரேஷன் கடையை திறந்து, பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கு, மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் வலியுறுத்துகின்றனர். 
 
 
thanks:dinakaran.com

No comments