Disqus Shortname

போலீசாரை கண்டித்து போராட்டம்

உத்திரமேரூர் :
பெருநகர் போலீசார் பொய் வழக்கு போடுவதாக கூறி, விசூர் கிராமவாசிகள் நேற்று மானாம்பதி சாலையில் மறியல் போராட்டம் நடத்தினர்.
உத்திரமேரூர் அடுத்த, விசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் காண்டீபன், 45. விவசாய கூலி. இவர் மீது, மணல் திருட்டு தொடர்பாக, போலீசில் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.மணல் கடத்தல்
இந்நிலையில், கடந்த 28ம் தேதி காலை விசூர் பகுதிக்கு வந்த பெருநகர் போலீசார், மணல் கடத்தல் தொடர்பாக விசாரிக்க வேண்டும் என கூறி, காண்டீபனை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றுள்ளனர். காண்டீபன் மறுநாள் வரை வீட்டுக்கு வராததால், பீதியடைந்த அவரது குடும்பத்தினரும், உறவினர்களும், நேற்று முன்தினம் மாலை பெருநகர் காவல் நிலையம் சென்று, காண்டீபன் குறித்து கேட்டுள்ளனர். அப்போது தான், மணல் கடத்தல் வழக்கு தொடர்பாக வழக்குப் பதிவு செய்து, வேலுார் மத்திய சிறையில் காண்டீபன் அடைக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால், ஆத்திரமடைந்த காண்டீபனின் உறவினர்கள் மற்றும் அப்பகுதிவாசிகள் 200க்கும் மேற்பட்டோர், பெருநகர் போலீசாரை கண்டித்து, நேற்று காலை உத்திரமேரூர் - வந்தவாசி நெடுஞ்சாலையில் குவிந்து, மானாம்பதி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். சமரச பேச்சு
தகவலறிந்த, மதுராந்தகம் டி.எஸ்.பி., ராஜேந்திரன் மற்றும் போலீசார், பொதுமக்களுடன் சமாதான பேச்சு நடத்தினர். இது தொடர்பாக, விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக, டி.எஸ்.பி., உறுதி அளித்ததை அடுத்து, அனைவரும் கலைந்து சென்றனர். இந்த மறியல் போராட்டத்தால், அப்பகுதியில், 20 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments