Disqus Shortname

ஆதார் அட்டை பணி காலதாமதம் தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

உத்திரமேரூர் மார்ச் 11:
உத்திரமேரூரில் ஆதார் அட்டைக்கு புகைப்படம் எடுக்க காலதாமதமானதால், தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகையிட்டனர்.
உத்திரமேரூர் ஒன்றியத்தில் 73 ஊராட்சிகள் உள்ளன. இங்கு ஒன்றரை லட்சத்துக்கு மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். தற்போது காஸ் உள்ளிட்ட அனைத்து தேவைகளுக்கும் ஆதார் அட்டை அவசியம் என மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.
இதனால் உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தின் ஒரு பகுதியில் ஆதார் அட்டை பதிவு செய்வதற்காக இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. ஆதார் அட்டைக்காக பதிவு செய்ய தினமும் 500க்கு மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர்.
காலை முதல் மக்கள் கூட்டம் அதிகரிக்கிறது. ஆனால் போதிய உபகரணங்கள் இல்லாதது, இடபற்றாக்குறை உள்பட பல்வேறு காரணங்களால், ஆதார் அட்டைக்கான பணி மந்தமாக நடக்கிறது. மேலும் தாலுகா அலுவலகத்துக்கு வெளியே விண்ணப்பத்தை பூர்த்தி செய்பவர்கள் தவறாக பூர்த்தி செய்து கொடுப்பதால் ஊழியர்களும் சிரமம் அடைகின்றனர்.
இதுதவிர, ஏற்கனவே விண்ணப்பித்தவர்களும் தங்களுக்கு ஆதார் அட்டை இதுவரை கிடைக்காததால், அவர்கள் மீண்டும் விண்ணப்பிக்கின்றனர். அதை பதிவு செய்யும்போது, ஏற்கனவே விண்ணப்பித்தது தெரிய வருகிறது. இதனால், இப்பணியில் கால விரயம் ஏற்படுகிறது.
இந்நிலையில் நேற்று காலை ஆதார் அட்டைக்கு விண்ணப்பிக்க ஏராளமான மக்கள் குவிந்தனர். நீண்ட நேரம் காத்திருந்தும், புகைப்படம் எடுக்கும் பணி மந்தகதியில் நடந்ததால், பொதுமக்கள் கடும் ஆத்திரமடைந்தனர். தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
தகவலறிந்து உத்திரமேரூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக ஆர்ப்பாட்டம் செய்தவர்களிடம் உறுதியளித்தனர். இதை ஏற்று அனைவரும் அமைதி அடைந்தனர்.
ஆதார் அட்டை பணி காலதாமதம்
தாலுகா அலுவலகத்தை கிராம மக்கள் முற்றுகை

No comments