Disqus Shortname

நிலவகை மாற்றம் செய்வதற்கான கட்டணம் கட்டாததால் மாணவர்கள் தவிப்பு

காஞ்சிபுரம்மே,23:
உத்திரமேரூர் அரசு கலைக் கல்லுாரி கட்டடம் கட்ட ஒதுக்கப்பட்ட நிலத்திற்கு, நிலவகை மாற்றம் செய்வதற்கான கட்டணத்தை செலுத்தாததால், அரசு பள்ளி மற்றும் கல்லுாரி மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
உத்திரமேரூர் தாலுகா பகுதியில், அரசு கலைக் கல்லுாரி அமைத்து தர வேண்டும் என, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக வலியுறுத்தி வந்தனர். இதை ஏற்று, உத்திரமேரூர் பகுதியில், புதிதாக அரசு கலைக்கல்லுாரி துவங்கப்படும் என, கடந்த 2013ம் ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்டது.
கல்லுாரிக்கான கட்டடங்கள் கட்டுவதற்கு, 12.5 கோடி நிதியும் ஒதுக்கப்பட்டது. இதை தொடர்ந்து, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல், உத்திரமேரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் ஒரு கட்டடத்தில், அரசு கலைக் கல்லுாரி தற்காலிகமாக இயங்கி வருகிறது. அலுவலகம், ஆய்வகம், நுாலகம் மற்றும் 8 வகுப்பறைகள் என, மொத்தம் 11 அறைகளில் கல்லுாரி செயல்பட்டு வருகிறது.
இந்த கல்லுாரியில், இளங்கலை தமிழ், ஆங்கிலம், இளநிலை கணிதம் மற்றும் கணினி அறிவியல், இளநிலை பொருளியியல் மற்றும் வணிகவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் தற்போது, 244 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இதற்கிடையில் நடப்பு ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக இதுவரை, 526 விண்ணப்பங்கள் வழங்கப்பட்டு உள்ளன. விரைவில் வகுப்புகள் துவங்க உள்ள நிலையில், பள்ளி மாணவர்களுக்கு மேலும் நெருக்கடி ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது.
இந்த நிலையில், திருப்புலிவனம் அருகே, கால்நடைத் துறைக்கு சொந்தமான, 10.5 ஏக்கர் மேய்க்கால் புறம்போக்கு நிலத்தை, கல்லுாரிக் கான கட்டடம் கட்டுவதற்காக மாவட்ட நிர்வாகம் ஒதுக்கியது. இடம் தேர்வு செய்து ஓராண்டாகியும், நிலத்தை கல்லுாரி நிர்வாகத்தின் பெயரில் மாற்றாததால், கல்லுாரிக்கான கட்டடம் கட்டுவதில் தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக, கல்லுாரி மாணவர்கள் மட்டுமின்றி, கல்லுாரிக்கு இடம் அளித்த பள்ளி மாணவர்களும் இடப்பற்றாக்குறையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுகுறித்து, கல்லுாரி நிர்வாக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: கல்லுாரிக்காக ஒதுக்கப்பட்ட நிலத்திற்கு மாற்றாக, கடல்மங்கலம் கிராமத்தில் உள்ள ஊராட்சிக்கு சொந்தமான, 10.5 ஏக்கர் தரிசு நிலம், கால்நடைத் துறைக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தில் தீவன புல், பயிரிடும் வகையில், மாற்றம் செய்வதற்காக, கடல்மங்கலம் ஊராட்சிக்கு 60,300 ரூபாய் தொகை செலுத்த வேண்டும் என, நிர்ணயிக்கப்பட்டது.
இந்த தொகையை கட்டினால் மட்டுமே, நில வகை மாற்றம் செய்யப்படும். இந்த நிதி ஒதுக்குமாறு, உயர்கல்வி துறைக்கு பரிந்துரை செய்யப்பட்டது. விரைவில், நிதி ஒதுக்கப்படும் என, தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Courtesy:http://kalvimalar.dinamalar.com

No comments