Disqus Shortname

தொண்டு நிறுவனத்தில் மாணவி மர்ம சாவு: மக்கள் முற்றுகையால் உத்திரமேரூரில் பதற்றம்

உத்திரமேரூர் மே. 9–:
 
 கன்னியாகுமரியில் உள்ள தொண்டு நிறுவனத்தில் படித்துவந்த மாணவி மர்மமான முறையில் இறந்தார். இதை கண்டித்து உத்திரமேரூரில் உள்ள தொண்டு நிறுவனத்தை மக்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த வாடாநல்லூரில் தனியார் தொண்டு நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் மூலம் ஏழை குழந்தைகள் பல்வேறு பள்ளிகளில் படிக்க வைக்கப்படுகின்றனர்.உத்திரமேரூர் அடுத்த அரசாணிமங்கலம் கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் மகள் மீனா (16). இவர் இந்த தொண்டு நிறுவனம் சார்பில் 8ம் வகுப்பு வரை படித்தார். பிறகு சரியாக படிப்பு ஏறவில்லை என படிப்பை பாதியில் நிறுத்திவிட்டதாக தெரிகிறது. தொண்டு நிறுவனத்தினர் மீண்டும் அழைத்து, கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தில் இயங்கும் தொண்டு நிறுவனத்தில் படிக்க மீனாவை அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் நேற்று முன்தினம் திடீரென மீனா இறந்துவிட்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் வந்தது. இதனால் அவர்கள் கதறி அழுதனர். இதுபற்றி தொண்டு நிறுவனத்திடம் கேட்டபோது, சரியான பதிலை கூறவில்லை.இந்த நிலையில், மீனாவின் உடல் நேற்றிரவு அரசாணிமங்களம் கிராமத்துக்கு கொண்டு வரப்பட்டது. உடலை பார்த்து பெற்றோர், உறவினர்கள் கதறி அழுதனர். மீனாவின் உடலில் காயங்கள் இருந்தது.  இதனால் பெற்றோருக்கு பல சந்தேகங்களை எழுப்பியது. இதனால் மீண்டும் தொண்டு நிறுவனத்துக்கு தொடர்புகொண்டபோது முறையாக பதிலை தெரிவிக்கவில்லை.

இதனால் ஆத்திரம் அடைந்த மீனாவின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் இன்று காலை வாடாநல்லூரில் உள்ள தொண்டு நிறுவனத்தை முற்றுகையிட்டனர். இதுபற்றி தகவல் அறிந்து உத்திரமேரூர் இன்ஸ்பெக்டர் மணிமாறன், போலீசாருடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.  மக்கள் மற்றும் தொண்டு நிறுவன நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

No comments