Disqus Shortname

ஒரக்காட்டுபேட்டை பாலாற்றில் மேம்பால பணி துவக்கம்

உத்திரமேரூர்அக், 07 :
ஒரக்காட்டுபேட்டை பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் கட்டுவதற்கான முதற்கட்ட பணிகள் துவங்கப்பட்டுள்ளன.உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்டது ஒரக்காட்டுபேட்டை கிராமம். இக்கிராமத்தை சுற்றி லும், காவித்தண்டலம், களியப்பேட்டை, திருவானைக்கோவில், விச்சூர், மிளகர்மணி, மாம்பாக்கம், கரும்பாக்கம், அரும்புலியூர், பேரணக்காவூர், சாத்தணஞ்சேரி, சீட்டஞ்சேரி, தண்டரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன.இக்கிராமங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள், வியாபாரிகள், மாணவ - மாணவியர் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும், ஒரக்காட்டுபேட்டை பாலாற்று படுகை வழியாக நடந்து அல்லது இருசக்கர வாகனங்களின் மூலம் 6 கி.மீ., துாரத்தில் உள்ள செங்கல்பட்டு சென்று வருகின்றனர்.மழைக்காலங்களில் பாலாற்றில் தண்ணீர் செல்லும் நேரங்களில் இப்பகுதிவாசிகள், சிதண்டி, மெய்யூர் வழியாக, 16 கி.மீ., துாரம் வரை சுற்றிக்கொண்டு செங்கல்பட்டு செல்லும் நிலை உள்ளது. இதனால், செங்கல்பட்டு சென்று வர வசதியாக ஒரக்காட்டுபேட்டை - ஆத்துார் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதிவாசிகள், கடந்த, 50 ஆண்டு காலமாக வலியுறுத்தி வந்தனர்.இது சம்பந்தமாக பல்வேறு அதிகாரிகளிடத்தில் கோரிக்கை மனுக்கள் அளித்தும், போராட்டங்கள் நடத்தியும் வந்தனர்.
இதன் தொடர்ச்சியாக, ஒரக்காட்டுபேட்டை- ஆத்துார் பாலாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்க, அரசின் சிறப்பு திட்ட நிதியில் இருந்து, 22 கோடி ரூபாய் கடந்த ஆண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மேலும், இதற்கான டெண்டர் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் அறிவிக்கப்பட்டு, பணி துவங்கிய, 24 மாதங்களில் மேம்பாலம் கட்டி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதை தொடர்ந்து, தற்போது மேம்பாலம் அமைய உள்ள பகுதியில் மூலக்கூறுகள் சரி பார்த்தல் மற்றும் வடிவமைத்தல் ஆகிய முதற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

No comments