Disqus Shortname

படூர் தரைப்பாலம் மூழ்கியது: சாலை துண்டிப்பால் மக்கள் தவிப்பு

உத்தரமேரூர் அருகே உள்ள படூர் தரைப்பாலத்தை மழை வெள்ளம் கடந்து செல்வதால் சாலை துண்டிக்கப்பட்டுள்ளது.
உத்தரமேரூர் பகுதிகளில் கடந்த 10 நாள்களாக தொடர்மழை பெய்து வருகிறது. இதனால் உத்தரமேரூர் அருகே காட்டாங்குளம் ஊராட்சியில் உள்ள ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்த உபரிநீர் கால்வாய் வழியாக படூர் ஏரிக்குச் செல்கிறது. படூர் கிராமத்தில் புதிய தரைப்பாலம் கட்டி முடிக்கப்பட்டு ஒரு மாதமே ஆகிறது. இந்த நிலையில் கால்வாய் தூர்வாரப்படாததாலும், தரைப்பாலம் தாழ்வாக அமைக்கப்பட்டுள்ளதாலும் வெள்ளநீர் பாலத்தை மூழ்கடித்தபடி ஓடுகிறது. சாலை துண்டிக்கப்பட்டதால் வெளியூர் செல்ல முடியாமல் மக்கள் தவித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள ஆடு, மாடுகளை மேய்ச்சலுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. படூர் ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு இந்த தரைப்பாலம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.
பாலத்தின் மீது செல்லும் வெள்ளம் காரணமாக ஆனம்பாக்கம், சிறுமயிலூர், சின்னாளம்பாடி, நீர்குன்றம், நெற்குன்றம் உள்ளிட்ட 15 கிராம மக்கள், ஆரம்ப சுகாதார நிலையத்துக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
 இதுகுறித்து அதிகாரிகளுக்கு தகவல் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது. காட்டாங்குளம் ஏரியிலிருந்து வெளியேறும் உபரிநீரை, வேறு மதகுகள் வழியாக வெளியேற்றி தற்போது அமைத்த தரைப்பாலத்தை அகலமாகவும், மிகவும் உயரமாகவும் அமைத்தால் இனிவரும் மழைக்காலங்களில் இதுபோன்ற நிலை இருக்காது என இப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.
 இதுகுறித்து காட்டாங்குளம் ஊராட்சி நிர்வாகமும், அதிகாரிகளும் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments