Disqus Shortname

உத்திரமேரூரில் 1000 ஏக்கர் பயிர்கள் சேதம்

உத்திரமேரூர், நவ, 27
உத்திரமேரூர் ஒன்றியத்தில் சுமார் 1000 ஏக்கர் விவசாய பயிர்கள் சேதம் குறித்து, அதிகாரிகள் உரிய நடவடிக்கை ஏதும் எடுக்காததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உத்திரமேரூர் ஒன்றியத்திற்குட்ட கம்மாலப்பூண்டி, அழிசூர், மருதம், குன்னவாக்கம், ஆனம்பாக்கம், காக்கநல்லூர், திருப்புலிவனம், கருவேப்பம்பூண்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பயிரிட்டிருந்த நெல், கரும்பு, வேர்க்கடலை மற்றும் காய்கறிகள் அண்மையில் பெய்த பலத்த மழையால் அழுகி சேதமாயின.

மேலும், தற்போது வரை ஒருசில  இடங்களில் இன்னும் மழைவெள்ளம் வடியாத நிலையே காணப்படுகிறது. இதுகுறித்து விவசாயிகள் தொடர்ந்து வேளாண்மை மற்றும் அரசுத்துறை அதிகாரிகளுக்கு தொடர்ந்து கோரிக்கை மனுக்கள் அளித்து வருகின்றனர். ஆனால், அரசுத்துறை அதிகாரிகள் இதுவரை சேதமான பயிர்களை பார்வையிட வரவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும், இந்த மழைக்கு உத்திரமேரூர், சின்னநாராசம்பேட்டை, திருவானைக்கோவில், கட்டியாம்பந்தல், திருவந்தவார், களியாம்பூண்டி, மாம்பாக்கம், மல்லிகாபுரம், புத்தளி உள்ளிட்ட ஏராளமான பகுதிகளில் மழை வெள்ளம் வீடுகளில் புகுந்து சேதம் ஏற்படுத்தியது. இதுவரையில் சுமார் 850 பேருக்கு மட்டுமே நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மழைநீர் கால்வாய்கள் முறையாக சீரமைக்காததால், கால்வாய்களிலிருந்து விளை நிலங்களுக்கு செல்லும் கால்வாய்கள் தூர்ந்து கவனிக்கப்படாமல் உள்ளதால் கால்வாய்களில் செல்லும் மழைநீரானது அருகில் உள்ள விளை நிலங்களில் புகுந்து எங்களது அறுவடைக்கு தயாராக இருந்த எங்களது நெற்பயிர்கள் பெருமளவில் சேதமடைந்துவிட்டது. ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்: எனவே இந்தக் கால்வாய்களை சீர்க்குலைக்கும் பெருவாரியான ஆக்கிரமிப்புகளை அகற்றிட நடவடிக்கை மேற் கொள்ளவும், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரண உதவிகள் வழங்குமாறும் விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

No comments