Disqus Shortname

திமுக வேட்பாளர் சுந்தரை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் பிரசாரம்


உத்தரமேரூர் ஏப்.22 :உத்திரமேரூரில் திமுக வேட்பாளர் சுந்தரை ஆதரித்து, மு.க.ஸ்டாலின் பேசியதாவது: தமிழகத்தை ஆளும் ஜெயலலிதா ஒருமுறை கூட
உத்திரமேரூருக்கு வந்திருக்கிறாரா? காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு வந்திருக்கிறாரா? அவர் போகும் ஒரே மாவட்டம் நீலகிரி மாவட்டம். காரணம் அங்குதான் கோடநாடு இருக்கிறது. ஜெயலலிதா தேர்தல் பிரசாரம் செய்ய போகும் இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை உச்சி வெயிலில் பெண்களை அடைத்து வைக்கின்றனர். இதில் காவல்துறை உறுதுணையாக செயல்படுகிறது.

ஸ்காட்லாந்துக்கு அடுத்தபடியாக பெயர் பெற்ற தமிழக காவல்துறை, ஜெயலலிதா அரசின் ஏவல்துறையாக செயல்பட்டு வருகிறது. ஜெயலலிதா பொதுக்கூட்டத்தில் 5 பேர் இறந்துள்ளனர். ஆனால், மக்களுக்காக நான் வாழ்கிறேன் என்று கூறும் ெஜயலலிதா அதை பற்றி கவலைப்படுவதாக தெரியவில்லை. வெள்ள நிவாரணம் உங்களுக்கு முழுமையாக கிடைத்திருக்கிறதா? உத்திரமேரூர் மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டிருக்கிறதா. தாலுகா இரண்டாக பிரிக்கப்பட்டுள்ளதா? எதையும் அவர் செய்யவில்லை. ஆகவே, கலைஞரை 6வது முறையாக ஆட்சி கட்டிலில் அமர்த்தினால் உத்திரமேரூரில் உள்ள அனைத்து பிரச்னைகளும் தீர்க்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

வேட்பாளர்களை கேவலப்படுத்துகிறார்

திமுக வேட்பாளர்கள் என் அருகில் இருந்து வாக்கு சேகரிக்கிறார்கள். ஆனால், ஜெயலலிதா பிரசாரம் செய்யும் போது உயரத்திலே அமர்ந்திருக்கிறார். அதிமுக வேட்பாளர்கள் கொத்தடிமை போல கீழே அமர்ந்து இருக்கிறார்கள். வேட்பாளர்களை கேவலப்படுத்துகிறார், கொச்சைப்படுத்துகிறார். அதுதான் அதிமுக. இதுதான் திமுக என்பதை உணர்ந்து திமுகவுக்கு வாக்களிக்க வேண்டும்.

வழிநெடுகிலும் மக்கள் கூட்டம்

உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் ஸ்டாலின் பிரசாரத்தில் ஈடுபட்ட போது ஒரு கிலோ மீட்டர் தூரத்துக்கு பெண்கள், மாணவர்கள் என்று திரண்டு வந்து உற்சாகமாக வரவேற்பு கொடுத்தனர். மாடிகளில் ஏறி ஸ்டாலினை ஆர்வமாக பார்த்தனர். இதனால், ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்ட இடங்கள் திருவிழா கூட்டம் போல அலைமோதியது.

மீண்டும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் ஸ்டாலின் உறுதி

ஸ்டாலின் ேபசும் போது “கடந்த திமுக ஆட்சி காலங்களில் கிராமங்கள் வளர்ச்சி பெற்றன. திமுக ஆட்சியில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை கொண்டு வந்து ஒரு வருடத்திற்கு 2500 கிராமங்களை தேர்ந்தெடுத்தோம். அதுபோல 5 வருடங்களில் அனைத்து கிராமங்களையும் தேர்ந்தெடுத்து அந்த கிராமங்களில் தீர்க்கப்படாத பிரச்னைகளான சாலை வசதி, விளையாட்டு திடல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றினோம். கிராமப்புற மாணவர்களுக்கு தொழில் பயிற்சி அளித்தோம். கிராமங்களின் நலன்களில் அக்கறை செலுத்தினோம். மீண்டும் ஆட்சிக்கு வந்தால் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தை கொண்டு வருவோம் என்று உறுதியளிக்கிறேன்” என்றார்.

No comments