Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பழமையான வினாயகர் சிலை அகற்றவந்த அரசு அதிகாரிகள் முற்றுகை

உத்திரமேரூர்  ஏப்.16,      

காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுக்கா ஒழையூர் கிராமத்தில் சுமார்
 5000 த்திற்கு மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர். ஒழையூர், கைதண்டளம் கிராம செல்லும் பிரதான சாலை ஓரத்தில் சுமார் 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த வினாயகர் சிலை உள்ளது. இந்த சிலையின் எதிரில் தனிநபர் ஒருவர் கிராம சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து வீடு கட்டி மதில் சுவர் அமைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கிராமத்திற்கு செல்லும் சாலை குறுகலானது. குறுகியசாலை வழியே கனரக வாகனங்கள், தீயணைப்பு வாகனம், அறுவடை இயந்திரம் போன்றவைகள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இது சம்மந்தமாக ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் பல்வேறு அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் உத்திரமேரூர் தாலுக்கா அலுவலகத்திலிருந்து வருவாய் ஆய்வாளர் வேலு, கிராம நிர்வாக அலுவலர் ஏழுமலை மற்றும் அரசுதுறை அதிகாரிகள் வினாயகர் சிலையை அப்புறபடுத்த முயன்றனர். தகவல் அறிந்த கிராம மக்கள் சுமார் 500 க்கும் மேற்பட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அரசு அலுவலர்களை முற்றுகையிட்டு சாலை மறியலில் ஈடுப்பட்டனர். அரசு அலுவலர்களை சிறைபிடித்த கிராம மக்கள் சரமாரி கேள்விகள் எழுப்பி வாக்குவாதத்தில் ஈடுப்பட்டனர். செய்வதறியாத அரசு ஊழியர்கள் உடனே வினாயகர் சிலையை மீண்டும் கோயிலிலேயே வைத்துவிட்டு சென்றனர். இதனால் கைத்தண்டலம், ஒழையூர் சாலையில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. இது குறித்து இப்பகுதி மக்கள் கூறுகையில் எங்கள் பகுதியில் பழமை வாய்ந்த இந்த வினாயகர் சிலையினை எந்த வித முன்னறிவிப்புமின்றி அரசு துறை அதிகாரிகள் அப்புறப்படுத்துகின்றனர். கோவிலின் எதிரே உள்ள சிலர் அண்மையில் சாலைக்கு சொந்தமான இடத்தை ஆக்கிரமிப்பு செய்து மதில் சுவர் அமைத்துள்ளனர். இந்த ஆக்கிரமிப்பை அகற்றாமல் புராதான கோயில் சிலையை அகற்றுவது மிகவும் கண்டிக்கத்தக்கது. மேலும், சாலை அருகே ஆக்கிரமிப்பு செய்துள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுத்து அவர்கள் செய்துள்ள ஆக்கிரமிப்பை அகற்றாவிட்டால் வரவிருக்கும் சட்ட மன்ற தேர்தலை எங்களது கிராம மக்கள் முற்றிலுமாக புறக்கணிப்போம் என்று கூறினர்.

No comments