Disqus Shortname

தேர்தல் விதிமுறை குறித்து விளக்கும் வைகுந்த வாசப் பெருமாள் கோயில் கல்வெட்டு

 வைகுந்த வாசப் பெருமாள் கோயில்
உத்திரமேரூர் வைகுந்த வாசப் பெருமாள் கோயிலில், ஒரு பெரிய கல்வெட்டு சாசனமே உள்ளது. உள்ளாட்சி அமைப்புக்கு தேர்தல் நடத்தும் முறை, வேட்பாளரின் தகுதிகள், நிபந்தனைகள், விதிகளை மீறினால் எடுக்கப்படும் நடவடிக்கைகள் உள்ளிட்ட ஏராளமான தகவல்கள் இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளன.

குட ஓலை முறை தேர்தல்
உத்திரமேரூர் அந்த காலத்தில் 30 குடும்புகளாக பிரிக்கப்பட்டிருந்தது. அந்தந்த குடும்பை நிர்வாகம் செய்ய, அதே குடும்பிலிருந்து ஒரு நபரை தேர்ந்தெடுத்தனர். இதற்கான தேர்தல், குட ஓலை முறையில் நடந்தது.
கிராம மக்கள் மற்றும் பெரியவர்கள் முன்னிலையில் ஒரு பானை வைக்கப்பட்டு, அதில், வேட்பாளர்களின் பெயர்களை ஓலையில் எழுதி வைக்கப்படும்.
ஒரு சிறுவனை அழைத்து, பானையில் உள்ள ஒரு ஓலையை குலுக்கி எடுக்க சொல்வர். அதை ஊர் பெரியவர் கையில் கொடுப்பர். அவர், அதில் எழுதியுள்ள பெயரை அனைவருக்கும் கேட்கும்படி வாசிப்பார். அதை, அனைவரும் உறுதி செய்து, வேட்பாளரை தேர்வு செய்வர். பொதுமக்கள் முன்னிலையில் வெளிப்படையாக தேர்தல் நடைபெறுவதால், முறைகேடுகள் தவிர்க்கப்பட்டது.
வேட்பாளருக்கான தகுதிகள்
வேட்பாளராக நிற்பவருக்கு, கால் வேலியிலிருந்து அரை வேலி நிலமாவது இருக்க வேண்டும். புறம்போக்கு நிலத்திலோ, பிறர் நிலத்திலோ வீடு கட்டி வசிக்க கூடாது.
35 வயதுக்கு மேற்பட்டவராகவும், 70 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். குறைந்தளவு கல்வித் தகுதியாவது பெற்றிருக்க வேண்டும்.
தமது கருத்துகளை தெளிவாக எடுத்துக் கூறும் ஆற்றல், செயல் புரிவதில் வல்லவனாக, ஒழுக்கமாக இருக்க வேண்டும். நேர்வழியில் சம்பாதிப்பவராகவும், நல்ல மனம் உடையவனாகவும் இருக்க வேண்டும். ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் அடுத்த மூன்று தேர்தல்களுக்கு நிற்க முடி யாது.
கடுமையான விதிமுறைகள்
தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் நிர்வாக கணக்குகளை சரிவர காட்டாமல் இருந்தால், பின்னர், தன் வாழ்நாள் முழுவதும் அவர் தேர்தலில் நிற்கமுடியாது. இவர் மட்டுமல்ல இவரது மகன், தந்தை வழி, தாய் வழி, மகளையோ, மகனையோ சம்பந்தம் செய்து கொண்டவர் வழியில் எந்தவிதமான சொந்தக்காரர்களும் தேர்தலில் நிற்க முடியாது.
ஆண்டுதோறும் பொது சொத்து மற்றும் தன் சொந்த சொத்துகளுக்கு கட்டாயம் கணக்கு காட்ட வேண்டும். குடிப்பழக்கம், பிறர் பொருட்களை அபகரித்தவர், பிறர் மனைவியை அபகரித்தவர் கண்டிப்பாக தேர்தலில் நிற்க முடியாது. குறிப்பாக, லஞ்சம் வாங்கினால் ஏழு தலைமுறைக்கு தேர்தலில் நிற்க முடியாது. இவ்வாறு அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தை பராந்தக சோழன் ஆண்டபோது, கி.பி. 920ல் ஊர் சபைக்கு உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டது இந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயிரம் ஆண்டுக்கு முன் எழுதப்பட்ட இந்த கல்வெட்டை பார்த்தால், சமீபத்தில் எழுதியது போன்று காட்சியளிப்பது வியப்பு.

No comments