Disqus Shortname

கிடப்பில் இருக்கும் பைபாஸ் ரோடு திட்டம். தொடரும் போக்குவரத்து நெரிசலால், உத்திரமேரூர் பகுதி மக்கள் அதிருப்தி

உத்திரமேரூர் பிப்,11
உத்திரமேரூர் நகரில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக ரூ.7 கோடி கோடி மதிப்பீட்டில் பைபாஸ் ரோடு
அமைப்பதற்கான திட்டத்திற்கு நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கப்பட்டும் திட்டம் கிடப்பில் போடப்பட்டுள்ளது, உத்திரமேரூர் பகுதி மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தின் முக்கிய நகராக திகழும் உத்திரமேரூர் , தாலுகாவின் தலைமையிடமாகவும் உள்ளது.  இந்நகரில்    பள்ளிகள் மற்றும் கல்லூரிகளும் நாளுக்கு நாள் பெருகி வருகின்றன. நகரின் இந்த வளர்ச்சியை ஒட்டி வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.இதன் காரணமாக நகரில் எப்பொழுதும் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

தினசரி காலை 9 மணி முதல் 10 மணி வரை நகரைச் சுற்றியுள்ள கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகளின் 300 க்கும் மேற்பட்ட வாகனங்கள் நகருக்குள் வந்து செல்வதால் நகரின் முக்கியப் பகுதிகளில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.   இதன் காரணமாக நகரில் நடந்து ரோட்டை கடப்பது என்பதே மிக சிரமமான காரியமாகும். கடுமையான போக்குவரத்து நெரிசல் காரணமாக பொதுமக்கள் கடுமையாக பாதிப்படைந்து வருகின்றனர்.
நகரின் வளர்ச்சி மற்றும் வாகனங்களின் எண்ணிக்கை உயர்விற்கு ஏற்ப நகரின் சாலைகள் இல்லை. பழமையான நகரான உத்திரமேரூரில் சாலைகள் அனைத்தும் ஆக்கிரமிப்பு காரணமாக குறுகியதாகவே உள்ளன. சாலை ஆக்கிரமிப்புகள் அரசியல் தலையீடுகள் காரணமாக இன்னும் முழுமையாக அகற்றப்படாமலேயே உள்ளன. ஒரு சிலரின் சுயநலத்தினாலும், அரசியல் பின்புலங்களாலும்  போக்குவரத்து நெரிசல் என்பது தொடர் கதையாகவே உள்ளது. இதேபோல் நகரில் போக்குவரத்தை கண்காணிக்கவும் சீர்படுத்தவும் போதிய போக்குவரத்து போலீசார் இல்லாததாலும், போக்குவரத்து விதிமுறைகளை கடுமையாக்க போலீசார் தயங்குவதும் போக்குவரத்து நெரிசலுக்கு காரணங்களாகக் கூறப்படுகின்றன.

தங்களது அன்றாட வாழ்க்கைக்கு பெரிய தலைவலியாக இருந்து வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு வேண்டி கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக உத்திரமேரூர் பகுதி மக்கள் அரசிற்கு பல்வேறு கோரிக்கைகள் வைத்து வந்துள்ளனர்.   அதன் அடிப்படையில் ஏப்ரல் – 2013-ல்
சட்ட பேரவை கூட்டத் தொடரில், அமைச்சர் எடப்பாடிகே.பழனிசாமி உத்திரமேரூர் நகருக்கு 7 கோடி மதிப்பில் 4.20 கிலோ மீட்டர் தொலைவிற்கு பைபாஸ் ரோடு  அமைக்கும் அறிவிப்பினை அரசு வெளியிட்டிருந்தது. இதனையடுத்து உத்திரமேரூர் நகரில் ரூ.7 கோடி மதிப்பீட்டில் பைபாஸ் ரோடு அமைப்பதற்கான  சர்வே பணிகள் முடிந்து திட்டம் குறித்த அறிக்கை அரசுக்கு அனுப்பியும் வைக்கப்பட்டிருந்தது. இத்திட்டத்தின்படி புதியதாக அமைக்கப்படும் பைபாஸ் ரோடு  அ.பி.சத்திரம் ரோட்டிற்கு இடையே தொடங்கி  வேடபாளையம் வழியாக வந்தவாசி ரோட்டில் இணையும் வகையில் சர்வே செய்யப்பட்டு பைபாஸ் ரோடு அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.  இதைத் தொடர்ந்து  ,2014 ஜீலை 29-ம் தேதி காஞ்சி வருவாய் கோட்ட அலுவலர் சந்திரன், அப்போதைய தாசில்தார் ரவி, நெடுஞ்சாலைத்துறை அலுவலர் சசிகலா, உத்திரமேரூர் எம்.எல்.ஏ வாலாஜாபாத் பா.கணேசன் உட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் தற்போது வரை எந்தபணியும் துவங்கப்படவில்லை.

 அதிமுக அரசு  இந்த திட்டத்திற்காக நிலம் கையகப்படுத்துவதற்கான நிதியை ஒதுக்கி தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டிருந்தார்.  முதல்வர் நிலம் கையகப்படுத்த நிதி ஒதுக்கீடு செய்துள்ளதால் உடனடியாக பைபாஸ் ரோடு அமைக்கும் பணி தொடங்கும் என பொதுமக்கள் எதிர்பார்த்திருந்தனர். ஆனால் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு ஒன்றை   வருடம் கடந்த நிலையிலும் இன்னும் பைபாஸ் ரோடு அமைக்கும் பணிகள் தொடங்கப்படாமல் உள்ளது.

கடந்த தேர்தல்களில் வேட்பாளர்களாக உத்திரமேரூர் தொகுதியில் போட்டியிட்டவர்கள் தங்களது தேர்தல் வாக்குறுதிகளில் பிரதான வாக்குறுதியாக உத்திரமேரூர் நகரின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பைபாஸ் ரோடு அமைக்கப்படும் என உறுதி கூறியிருந்தனர். ஆனால் தேர்தல் முடிந்து ஆண்டுகள் பல கடந்தும் இன்னும் அதற்கான நடவடிக்கையில் அவர்கள் ஈடுபட்டதாகத் தெரியவில்லை.இதனால் உத்திரமேரூர் பகுதி பொதுமக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். இந்த சாலை அமைத்தால் உத்திரமேரூர் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம மக்களுக்கு பயனுள்ளதாக அமையும் எனவே இப்பணியை விரைவில் துவக்கி முடித்துதர
பொதுமக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்,

1 comment:

  1. பைபாஸ் ரோடு திட்டம் மூலம் விவசாய நிலங்கள் அழிக்கபட வேண்டுமா?

    ReplyDelete