Disqus Shortname

செங்கை - உத்திரமேரூர் சாலை பணிக்கு.. ரூ.55 கோடி!  32 கி.மீ., நான்குவழி சாலையாக்க திட்டம் செய்தித்தாள் செய்தி -07-11-2021

செங்கை - உத்திரமேரூர் சாலை பணிக்கு.. ரூ.55 கோடி!  32 கி.மீ., நான்குவழி சாலையாக்க திட்டம்

உத்திரமேரூர் : செங்கல்பட்டு -- உத்திரமேரூர் இருவழிச் சாலையில், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில், 32 கி.மீ., துாரம், 16.2 மீட்டர் அகலத்திற்கு நான்குவழிச் சாலையாக மாற்றும் திட்ட பணிகளில், நெடுஞ்சாலைத் துறை இறங்கியுள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத் தில், வளர்ந்து வரும் பகுதியாக உத்திரமேரூர் உள்ளது. நாள்தோறும், உத்திரமேரூர் சுற்று வட்டார பகுதியிலிருந்து சென்னைக்கும், பிற பகுதிகளுக்கும் செல்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.உத்திரமேரூரை சுற்றிய பகுதிகள் விவசாய நிலங்கள் என்பதால், வேளாண் இடு பொருட்கள் எடுத்து வரவும், செல்லவும் வாகன போக்குவரத்து அதிகரித்துள்ளது.செங்கல்பட்டு - உத்திர மேரூர் இருவழி சாலை, மானாம்பதி கூட்டுச்சாலை, வந்தவாசி மாநில நெடுஞ்சாலையுடன் இணைகிறது. மொத்தம், 32 கி.மீ., துாரமுள்ள இச்சாலை, 7 கி.மீ., அகலம் உடையது.இதன் வழியாக, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டமான உத்திரமேரூர் வழியாக தினமும் ஆயிரக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள், பள்ளி, கல்லுாரி வாகனங்கள் திருவண்ணாமலை மாவட்டத்திற்கு செல்கின்றன. அதேபோல், வந்தவாசி - காஞ்சிபுரம் சாலையில் உள்ள மாங்கால் சிப்காட்டில், தொழிற்சாலைகளுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்து, உதிரி பாகங்கள், உற்பத்திக்கு தேவையான மூலப்பொருட்களை ஏற்றி வரும் கனரக வாகனங்களும் செல்கின்றன.வாகன போக்குவரத்துக்கு அதிகம் உள்ள இந்த சாலை, அகலம் குறைவாக உள்ளதால் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகனங்கள் நீண்ட நேரம் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது.இதனால், செங்கல்பட்டு - உத்திரமேரூர் சாலையை, நான்குவழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய வேண்டும் என, கோரிக்கை எழுந்தது.உத்திரமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தரும், நான்குவழி சாலையாக மாற்றவேண்டும் என, தமிழக அரசுக்கு கோரிக்கை மனு அளித்திருந்தார். இதையடுத்து செங்கல்பட்டு - உத்திரமேரூர் இருவழிச் சாலையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், தமிழக முதல்வர் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நான்கு வழிச் சாலையாக விரிவாக்கம் செய்ய முடிவானது.அதன்படி, செங்கல்பட்டில் இருந்து, புக்கத்துறை, உத்திரமேரூர் வழியாக மானாம்பதி - வந்தவாசி கூட்டுசாலை வரை, 32 கி.மீ., துாரத்திற்கு, 7 மீட்டர் அகலம் உடைய சாலை, 16.2 மீட்டர் அகலத்திற்கு நான்கு வழிச்சாலையாக விரிவாக்கம் செய்ய, நெடுஞ்சாலைத் துறையினர், 55 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு செய்து, முதற்கட்டமாக ஆய்வுப்பணியில் ஈடுபட்டுள்ளனர். இச்சாலையில் உள்ள குடியிருப்புகள், பாலம், மின் கம்பம், சாலை வளைவு உள்ளிட்டவற்றை, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இப்பணி முடிந்ததும், முதற்கட்டமாக 7.2 கி.மீ., துாரத்திற்கு நான்குவழிச் சாலை அமைக்கும் பணி துவக்கப்பட உள்ளதாக, நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.செங்கல்பட்டு - உத்திரமேரூர் வழியாக மானாம்பதி கூட்டு சாலை - வந்தவாசி சாலை வரை, 32 கி.மீ., துாரத்திற்கு சி.எம்.ஆர்.டி.பி., எனப்படும் தமிழக முதல்வரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் நான்குவழிச் சாலைக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது. முதற்கட்டமாக ஆய்வுப் பணி நடந்து வருகிறது. இதையடுத்து, புக்கத்துறையில் இருந்து, 7.2 கி.மீ., நீளத்திற்கு மழை நீர் வடிகால் வசதியுடன் சாலை விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. குடியிருப்பு பகுதிகளில், நடைபாதை ஏற்படுத்தப்படும். நான்குவழிச் சாலை விரிவாக்கப் பணி, ஐந்து ஆண்டுகளில் முழுமை பெறும்.எம்.அனந்தகல்யாணராமன்நெடுஞ்சாலைத் துறை உதவி இயக்குனர்,உத்திரமேரூர்


Thanks 
Dinamalar

No comments