Disqus Shortname

உத்திரமேரூரில் துணிகர தொடர் கொள்ளை: அச்சத்தில் மக்கள்

உத்திரமேரூர் 6-6-2015:

அம்மன் கோயில் உண்டியல் கொள்ளை

உத்திரமேரூர் அடுத்த எண்டத்தூர்  சாலையில் நூக்கல் அம்மன் கோயில் உள்ளது. தினமும் காலை, மாலையில் பூஜை நடக்கும். அப்பகுதியை சேர்ந்த மக்கள் வழிபடுவது வழக்கம்.நேற்று முன்தினம்(04-06-2015) இரவு வழக்கம் போல பூஜை முடிந்து கோயில் நிர்வாகி ரமேஷ், நடையை பூட்டி சென்றார். நேற்று காலையில் நடை திறக்க வந்தார். கோயில் சுற்றுச்சுவர் கேட்டை திறந்து உள்ளே சென்றபோது, அம்மன் கோயிலுள்ள கிரில் கேட், கடப்பாறையால் நெம்பி பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். உள்ளே இருந்த உண்டியல் மாயமானது. அக்கம் பக்கத்தில் தேடி பார்த்தபோது, அந்த உண்டியல் கோயில் பின்புறம் கிடந்தது. அதை உடைத்து அதில் இருந்த பணத்தை மர்ம ஆசாமிகள் கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதுகுறித்து உத்திரமேரூர் போலீசில் ரமேஷ் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிந்து மர்ம ஆசாமிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.

அரசு பஸ் டிரைவர் வீட்டில் கொள்ளை

இன்னிலையில்  உத்திரமேரூர் நுக்கலம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். அரசு போக்குவரத்து கழகத்தில் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
கர்ப்பமாக உள்ள இவரது மனைவிக்கு வளைகாப்பு நிகழ்ச்சி நடத்தியது பின்னர் அவரை செஞ்சியில் உள்ள மாமியார் வீட்டில் விடுவதற்காக வீட்டை பூட்டி விட்டு சென்றார்.நேற்று (05-06-2015) இரவு வீட்டிற்கு திரும்பி வந்தபோது கதவு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உள்ளே சென்று பார்த்த போது பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த 5 சவரன் நகை கொள்ளை அடிக்கப்பட்டிருந்தது. மேலும் வீட்டின் வெளியே நிறுத்தி இருந்த அவரது மோட்டார் சைக்கிளையும் கொள்ளையர்கள் திருடி சென்று இருந்தனர்.
இது குறித்து பாஸ்கர் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். அடுத்தடுத்து நடைபெற்ற இந்த கொள்ளை  சம்பவங்களால்  உத்திரமேரூரில்  பரபரப்பு ஏற்பட்டுள்ளது
 

No comments