Disqus Shortname

உலகிற்கு குட ஓலை முறையை எடுத்துரைத்த வைகுந்த வாசப் பெருமாள் கோயில் கல்வெட்டு

உத்திரமேரூர் சதுர்வேதி மங்கலம் சோழர்களால் பார்ப்பனர்களுக்கு தானமாக கொடுக்கப்பட்ட 12 சேரிகளை உள்ளடக்கிய ஊர்களாகும். அந்த சதுர்வேதி மங்கலத்தின் தோட்டம், ஏரி போன்றவற்றிற்கான வாரியங்களை நாட்டாமை செய்பவருக்கான தேர்தல் முறையையே இந்த கல்வெட்டுகள் குறிப்பிடுகின்றன. குட ஓலை என்பது கிராம நிர்வாக சபை உறுப்பினரை தேர்ந்து எடுக்க பழங்காலத்தில் பயன்பட்டது. இந்த முறையில் கிராமத்தின் பகுதி வாரியாக மக்கள் கூடி, தகுதியான உறுப்பினர்கள் பெயர்களை ஓலைச்சுவடிகளில் எழுதுவார்கள். பிறகு அதை மொத்தமாகக் கட்டி, ஒரு பானையில் போட்டு குலுக்கல் முறையில் தேர்ந்தெடுப்பார்கள்.

முறைகேடுகள் அகற்றுதல்

 இக்காலத்தில் தேர்தல் பெட்டியில் முறைகேடு, ஓட்டு சாவடியில் முறைகேடு, ஓட்டு எண்ணுவதில் முறைகேடு என்று செய்திகள் வருகின்றன. இது போன்ற பிரச்னைகளை வராமலிருக்க அக்காலத்தே வழி செய்திருக்கிறார்கள். குடவோலை எடுக்கும் முறை ஊர் மக்கள் அனைவரின் முன்னிலையில் நடைபெறும். ஊரில் பெரியவர்கள் மத்தியில் அக்குடம் வைக்கப்படும். வயதானவர் எழுந்து நின்று பார்வையிடுவர். ஒரு சிறுவரை அழைத்து ஒரு ஓலை எடுக்க சொல்வர். ஒவ்வொரு குடும்புக்கும் ஒரு ஓலையாக முப்பது குடும்புக்கு முப்பது ஒலை எடுக்கப்படும். எடுத்த ஓலையை ஊர் மத்யஸ்தர் கையில் கொடுப்பர். மத்யஸ்தர் தான் கையில் எந்த ஓலையையும் ஒளித்து வைத்திருக்கவில்லை என்று எல்லோருக்கும் தெரிவிக்க தனது கையை அகல விரித்து காண்பித்து பின், அகல விரித்த கையில் சிறுவன் எடுத்த ஓலையை வாங்கி அதில் எழுதியுள்ள பெயரை எல்லோரும் கேட்கும்படி வாசிப்பார். ஓலையை மண்டபத்தில் உள்ள பெரியவர்கள் அனைவரும் ஒவ்வொருவராக வாசிப்பர். வாசித்த பெயர் சரிதான் என்ற பின்னர் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டவர் ஆவார்.

உத்திரமேரூரில் ஒரு பெரிய கல்வெட்டுச் சாசனமே இருக்கிறது. தமிழ்நாட்டை பராந்தக சோழன் ஆண்டபோது கி.பி. 920ல் ஊர்ச்சபைக்கு தேர்ந்தெடுப்பதை குறிக்கும் கல்வெட்டில் தான் இவை அனைத்தும் எழுதப்பட்டுள்ளன.  நேற்று தான் எழுதியது போல் உள்ள இந்த ஆயிரம் ஆண்டுக்கு முந்திய கல்வெட்டைப் பார்த்தால் நாம் வியப்போம். அக்காலத்தில் பொது வாழ்வில் அரசியலில் ஈடுபட்டோரின் தன்மை என்ன? இன்று நிலமை எவ்வாறு உள்ளது என்று ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

தேர்தலில் நிற்கத் தகுதிகள்

உத்திரமேரூர் முப்பது குடும்புகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. அந்தந்த குடும்பைச் சேர்ந்தவர்கள் அந்த குடும்பிலிருந்து ஒரு நபரைத் தேர்ந்தெடுக்க வேண்டும். தேர்வுக்கு நிற்பவர் சில அடிப்படைத் தகுதிகள் பெற்றிருக்க வேண்டும். முதலில் அசையாத சொத்து சிறிதாவது உடையவராக இருத்தல் வேண்டும். கால் வேலியிலிருந்து அரை வேலி நிலமாவது அவருக்கு இருக்க வேண்டும். புறம்போக்கு நிலத்திலோ, பிறர் நிலத்திலோ வீடு கட்டிக் கொண்டிருப்பவராக இல்லாமல் தன் மனையில் வீடு எடுத்துக் கொண்டவராக இருக்க வேண்டும்.

2வது தகுதி 35 வயதுக்கு மேற்பட்டவராகவும், 70 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். மூன்றாவதாக ஒரு குறிப்பிட்ட அளவு கல்வி கற்றிருக்க வேண்டும். படிப்புக் கூட இல்லாமல் சட்டம் இயற்றவோ நெறிப்படுத்தவோ இயலுமா? படிப்பு மட்டுமிருந்தால் போதாது. தெளிவாக எடுத்துக் கூறும் ஆற்றலும் பெற்றிருக்க வேண்டும் என்று கல்வெட்டு கூறுகிறது. 4வது செயல் புரிவதில் வல்லவனாக இருக்க வேண்டும். அதை கல்வெட்டு “ காரியத்தில் நிபுணன் “ என்று கூறுகிறது. 5வது அவன் ஒழுக்கமாக இருக்க வேண்டும்.

ஆறாவதாக நேர்வழியில் சம்பாதித்த பொருளை உடையவனும் நல்ல மனம் உடையவனாகவும் இருக்க வேண்டும். ஏழாவது மிகமிக இன்றியமையாத தகுதி ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் அடுத்த மூன்று தேர்தல்களுக்கு நிற்க முடியாது. இவ்வாறு கல்வி, வயது, சொத்து, ஒழுக்கம், செயல்திறன், நேர்வழிச் சம்பாத்தியம், மனத்தூய்மை ஆகியவையே தகுதிகளாகக் கொண்டு அத்துடன் இதற்கு முன் மூன்று தேர்தல்களில் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப் படாதவராகவும் இருத்தல் வேண்டும் என்று தகுதியை வரையறை செய்து குறிக்கிறது கல்வெட்டு.

தகுதியற்றவர் யார்


யார் யார் தகுதியற்றவர் என்றும் தேர்தலில் நிற்க முடியாது என்றும் தெளிவாகக் கூறுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பின்னர் ஒழுங்காகக் கணக்கு காட்டாமல் இருந்தாரானால் பின்னர் தன் வாழ்நாள் முழுவதும் தேர்தலில் நிற்கமுடியாது. இவர் மட்டுமல்ல இவரது மகன், பெயரன், தந்தைவழி, தாய்வழி, மகளையோ, மகனையோ சம்பந்தம் செய்து கொண்டவர் வழியில் எந்தவிதமான சொந்தக்காரர்களும் தேர்தலில் நிற்க முடியாது என்று கல்வெட்டு கூறுகிறது.

பொதுச் சொத்துக்கு கணக்கு காட்ட வேண்டும். தன் சொத்துக்கும் கணக்கு காட்ட வேண்டும் ஒவ்வொரு ஆண்டும் கணக்கு காட்ட வேண்டும் என்பது கருத்து. இல்லையெனில் அவனது இருவழிச் சொந்தக்காரர்களும் எப்பொழுதும் தேர்தலில் நிற்க முடியாது எனக் கடுமையான விதி ஏற்படுத்தப்பட்டது. இது மட்டுமல்ல கள்சாராயம் குடிப்பவன், பிறர் பொருள் அபகரித்தவன், பிறர் மனைவியை அபகரித்தவன் நிற்க முடியாது. லஞ்சம் இதை கையூட்டு என்று கல்வெட்டு கூறுகிறது. யாராவது லஞ்சம் வாங்கினால் ஏழு தலைமுறைக்கு தேர்தலில் நிற்க முடியாது.

சுந்தரவரதப் பெருமாள் கோயில்


பக்தர்கள் நினைத்தது நிறைவேறும்அருள்மிகு  சுந்தரவரதப் பெருமாள் கோயிலாகும். வரலாற்று சிறப்புமிக்க இந்த திருத்தலம் 1200 ஆண்டுகளுக்கும் முற்பட்டதாகும். வாஸ்து வித்தையில் திறன் பெற்ற பரமேசுவரத் தச்சனைக் கொண்டு நந்திவர்ம பல்லவன் இதை கட்டுவித்தான் ‘ மயன் மதம்‘ என்ற நூலின் அடிப்படையில் இது கட்டப்பட்டிருக்கிறது என்பது ஐதீகம். வைணவத்தில்- வைகாநசம், பஞ்சராத்ரம் என்று இரண்டு விதமான ஆகம முறைகள் உண்டு. திருப்பதி வைகாநச ஆகமப் படி கட்டப்பட்டதாகும்.

அந்த ஆகமப் விதிப்படியே உத்திரமேரூரிலும் வழிபாடு நடந்து வருகிறது. வைகாநச ஆகமத்தில் ‘ சகஸ்ராதிக விப்ரக்ராமி ‘ எனும் பிரமாண வாசகம் ஒன்று இருக்கிறது. இக்கோயில் 16ம் நூற்றாண்டுக்கு உரிய கோயில் என்று உத்திரமேரூர் கயிலாசநாதர் கோயிலில் உள்ள கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த கோயில் தவிர இதே மாதிரி மூன்று கோயில்கள் தமிழ்நாட்டில் உள்ளன. அதாவது காரைக்குடி திருக்கோட்டியூர் கோயிலும், மதுரை கூடலழகர் கோயிலும் குறிப்பிடத்தக்கவை. மற்றொரு கோயிலான சென்னை பெசன்ட் நகர் அஷ்டலட்சுமி கோயிலாகும்.

உத்திரமேரூர் சுந்தரவரதப் பெருமாள் கோயிலைப் பார்த்து நிறுவப்பட்டதாக வரலாற்று சிறப்புகள் கூறுகின்றன. நவ மூர்த்தி பிரதிஷ்டையுடன் கூடிய, அஷ்டாங்க விமானம் உத்திரமேரூரில் சுந்தரவரதப் பெருமாள் கோயில் மட்டுமே உள்ளது இதன் தனிச்சிறப்பாகும். திருமந்திரத்தின் 8 எழுத்துக்களை உணர்த்தும் வகையில் இந்த அஷ்டாங்க விமானம், மூலைக்கு 2 முகமாக அமைந்துள்ளது. மேலும் இக்கோயிலில் வைணவத்தின் மூன்று ரகசியார்த்தங்களைக் குறிப்பிடும் மூன்று தலங்களை கொண்டிருக்கிறது.

பிரம்ம தீர்த்தம்


இக்கோயிலின் முற்றுப் பெறாத ராஜ கோபுரத்தை தாண்டி உள்ளே நுழைந்தால் பிரம்மதீர்த்தம் என்ற திருக்குளம் தெரியும் பக்தர்களின் நீண்ட கால நம்பிக்கையாகும்.

சேவிப்பு சிலை

ஆஜானுபாகுவான அனுமன் சிலையை கடந்தால், கருடாழ்வாரின் சேவிப்பு சிலை புலப்படும். கோயிலுள் அருள்மிகு சுந்தர வரதர் நின்ற கோலத்தில் தரிசனம் தருகிறார். உற்சவ மூர்த்தி உன்னத அழகோடு உபநாச்சிமாருடன் காட்சி தருகிறார். உள் பிராகாரத்தை வலம் வருகையில் அச்சுத வரதன் ஆனந்தவல்லி தாயார், அநிருத்ர வரதன் என்று ஒவ்வொரு திக்கிலும் மனம் நிறைந்த கோலங்கள் தெரிகின்றன.

தரிசனம்

கோயிலின் முதல் தளத்தில் கிழக்கு நோக்கி போல் வைகுந்தப் பெருமாள்- அமர்ந்த கோலத்தில் தரிசனம் தருகிறார். தெற்கே பார்க்கும் கிருஷ்ணார்ஜூனன், மேற்கே நோக்கும் யோக நரசிம்மன் மூர்த்தி, வடக்கே பார்க்கும் போது லட்சுமி வராக மூர்த்தி என்று இங்கே உள்ள வடிவங்களில் எழில் கொஞ்சுகிறது.  இத்தளத்தின் வெளியில் நின்று பார்த்தால் அஷ்டாங்க விமானத்தின் அழகு முழுமையாக தெரியும். அடுத்த தளத்தில் திருவரங்கநாதர் தெற்கே சிரம் வைத்து தரிசனத்திற்கு போவோரை நோக்கியபடி படுத்திருக்கிறார். மரீசு மகரிஷியும், மார்க்கண்டேயரும், பிரம்மாவும், தேவியும் இவரை வணங்கும் நிலையில் இருக்கிறார்கள்.

அத்திரமரம்

கோயிலின் மூன்று நிலைகளில் உள்ள மூர்த்திகள் அத்தி மரத்தால் உருவானவை என்பது குறிப்பிடதக்கது. அவை அனுவளவும் பழுதுறாத வண்ணம் காலத்தை வென்று அருட் கோலத்துடன் துலங்குகின்றன. 1972-1973ம் ஆண்டுகளில் ஸ்ரீமத் வேதாந்த ராமானுஜ மகாதேசிகள் அருளாசியுடன் ஊர்ப் பெரியவர் காலஞ்சென்ற வக்கீல் ராமானுஜாச்சாரியார் தலைமையில் பழைமைக்கு ஊறு நேராதவாறு கோயில் புதுப்பிக்கப்பட்டது.
இக்கோயிலின் பிரம்மோற்சவம் ஆண்டுதோறும் சித்திரையில் நடைபெறுகிறது. இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் மனதில் நினைத்தது நிறைவேறும் என்பது ஐதீகம்.

துரியோதனன் சூழ்ச்சியால் அக்ஞாதவாசத்தின் போது பாண்டவர்களுக்கு பைத்தியம் பிடிக்க நாரதரின் உபதேசத்தால் விமோசனம் தேடி உத்திரமேரூக்கு வருகிறாள் பாஞ்சாலி. தாயார் சன்னதியை அடைந்து பிரார்த்திக்கிறாள் அப்போது இறைவன் தருமனுக்கு வைகுந்த வரதனாகவும், பீமனுக்கு சுந்தர வரதனாகவும், அர்ச்சுனனுக்கு அச்சுத வரதனாகவும், நகுலனுக்கு அநிருத்ர வரதனாகவும், சகாதேவனுக்கு கல்யாண வரதானகவும், நாரதருக்கு யோக ரூபமாகவும் காட்சி தந்து அனுக்கிரகம் செய்கிறான். தன் வாழ்வுக்கு ஆனந்தம் தந்ததால் இறைவியை ‘ ஆனந்த வல்லித் தாயார்‘ என்று போற்றுகிறாள் திரவுபதி. இப்படியாக பாண்டவர்க்கு அருள் செய்ததால் இது பஞ்சவரத ஷேத்திரம் எனப்பட்டது. என்கிறது தல புராணம்.

No comments