Disqus Shortname

உத்திரமேரூர் புறவழி சாலை திட்டத்தை விரைந்து முடிக்க எம்.எல்.ஏ சுந்தர் பேரவையில் வலியுறுத்தல்

சென்னை 01Aug 2016: பேரவையில் நேற்று (01-08-2016)உணவு மற்றும் கூட்டுறவு துறை மானிய கோரிக்கைகளின் மீது திமுக உறுப்பினர் சுந்தர் (உத்திரமேரூர் தொகுதி) பேசியதாவது:   தமிழ்நாட்டில் மிகப்பெரிய ஊராட்சி ஒன்றியமாக உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது. எனவே உத்தரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை 2 ஆக பிரிக்க வேண்டும். உத்திரமேரூர் புறவழி சாலை, வாலாஜா பாத் புறவழி சாலை ஆகியவற்றை அமைக்க வேண்டும். நெடுஞ்சாலை துறை அமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி: இந்த பணிகளுக்கு ரூ.66.33 கோடி நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. தற்போது, நிலம் கையகப்படுத்தும் பணி நடந்து வருகிறது.
சுந்தர்: திருக்கழுக்குன்றம், உத்திரமேரூர் உள்ளிட்ட காஞ்சிபுரம் மாவட்டத்தில் பல இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களை அமைக்க வேண்டும். திமுக ஆட்சியில் கொண்டு வந்த ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம்...

உள்ளாட்சி துறை அமைச்சர் வேலுமணி (குறுக்கிட்டு): ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை திமுக ஆட்சியில்தான் கொண்டு வந்தார்கள் என்று திமுக உறுப்பினர் பேசினார். ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை முதலில் உருவாக்கியதே எம்ஜிஆர்தான். இந்த குடிநீர் திட்டம் மூலம் கிருஷ்ணகிரி, தருமபுரி மாவட்டங்களில் உள்ள மக்கள் முழுவதுமாக பயனடைகிறார்கள். மு.க.ஸ்டாலின்: தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள ஏராளமான கிராமங்களுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டம் கிடைப்பதில்லை. 40 முதல் 50% ஊராட்சிகளுக்கு ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் தண்ணீர் கிடைப்பதில்லை என்பதை ஆதாரங்களுடன் கூறுகிறேன். அமைச்சர் அந்த மாவட்டங்களை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களை அழைத்து கொண்டு அங்கு ஆய்வு நடத்தி அனைவருக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது என்பதை நிரூபிக்க தயாரா?  நானும் வருகிறேன். அமைச்சர் வேலுமணி: ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் பயன்பெறும் கிராமங்களுக்கு குடிநீர் முழுவதுமாக வழங்கப்படுகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.

No comments