Disqus Shortname

விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

உத்திரமேரூர் : Dec 28:
 உத்திரமேரூர், :உத்திரமேரூர் தாலுகாவை மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து நிவாரணம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று திங்கள்கிழமையன்று  விவசாய சங்கத்தினர் பட்டை நாமம் அணிந்து போராட்டம் நடத்தினர்.
சமீபத்தில் பெய்த மழையால் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உத்திரமேரூர் தாலுகா உட்பட 12 தாலுகாக்களும் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆனால் உத்திரமேரூர் தாலுகாவைத் தவிர மற்ற அனைத்து தாலுகாக்களையும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளாக மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவித்தார்.

இந்நிலையில் ‘‘மிகப்பெரிய பேரழிவை சந்தித்த உத்திரமேரூர் தாலுகாவை மழையால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவிக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. எனவே தமிழக அரசும், மாவட்ட ஆட்சியரும் உத்திரமேரூர் தாலுகாவை பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து உரிய நிவாரணங்கள் வழங்கிட வேண்டும். இல்லையென்றால் பட்டை நாமமிட்டு பட்டினிப் போராட்டம் நடத்தப்படும்’’ என்று இயற்கை வேளாண் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.
அதன்படி நேற்று இயற்கை வேளாண் விழிப்புணர்வு சங்கத்தின் சார்பில் விவசாயிகள் உத்திரமேரூர் தாலுகா அலுவலகம் முன்பு உடலெங்கும் பட்டை நாமமிட்டும், கைகளில் சட்டி ஏந்தியபடியும் போராட்டம் நடத்தினர். அப்போது ‘‘உத்திரமேரூர் தாலுகாவை வெள்ளம் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து பொதுமக்களுக்கு முறையாக நிவாரணம்  வழங்கிட வேண்டும்’’ என்பதை வலியுறுத்தி கோசங்கள் எழுப்பினர்.

இந்தப் போராட்டத்திற்கு இயற்கை வேளாண் விழிப்புணர்வு சங்கத் தலைவர் சோழனூர் மா. ஏழுமலை தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் பரசுராமன், சத்தியவேல், தாமஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டாரத் தலைவர் நாகராஜன் வரவேற்றார். சங்கத்தின் துணை பொதுச்செயலாளர் மாயகிருஷ்ணன், பொருளாளர் ரவீந்திரன், பொதுச் செயலாளர் சின்னாலம்பாடி ரவி, உறுப்பினர் தவணைகிரி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். இந்தப் போராட்டத்தில் இயற்கை வேளாண் சங்கத்தை சேர்ந்த நூற்றுக் கணக்கான விவசாயிகள் கலந்துகொண்டனர். இதையடுத்து வட்டாட்சியரிடம் மீண்டும் மனு அளிக்கப்பட்டது.

No comments