Disqus Shortname

செய்யாறு தரைப்பாலத்தை சீரமைக்க பழைய குழாய்களை பயன்படுத்துவதா?

காஞ்சிபுரம் டிச 14. :
காஞ்சிபுரம்  அருகே வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட செய்யாறு தரைப் பாலத்தை தற்காலிகமாக  சீரமைக்க வீணாக கிடந்த ‘வீராணம்’ ஏரியின் குடிநீர் குழாய்கள் கொண்டு  வரப்பட்டுள்ளன. கனமழையின் காரணமாக காஞ்சிபுரம் மாவட்டம் வெள்ளக்காடாக  மாறியது. மக்கள் எதிர்பாராத அளவுக்கு, நீர் நிலைகள் நிரம்பி, ஆறுகளிலும்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. திருவண்ணாமலை மாவட்டத்தில் துவங்கும் செய்யாறு,  காஞ்சிபுரம் மாவட்டத்தில் நுழைந்து, கடலில் கலக்கின்றன.

காஞ்சிபுரம்-  உத்திரமேரூர் சாலையில் உள்ள மாகரல், வெங்கச்சேரி ஆகிய கிராமங்களுக்கு இடையே  இந்த செய்யாறு செல்கிறது. கிராம மக்கள் பயன்பெறும் வகையிலும், வாகன  போக்குவரத்து வசதிக்காகவும், செய்யாற்றின் குறுக்கே தரைப்பாலம் கடந்த, 40  ஆண்டிற்கு முன்பு அமைக்கப்பட்டது. தற்போது, செய்யாற்றில் ஏற்பட்ட  வெள்ளப்பெருக்கால், பாலத்தின் ஒரு பகுதி அடித்து செல்லப்பட்டது. இதனால்,  கடந்த 10 நாட்களுக்கு மேலாக, காஞ்சிபுரம்- உத்திரமேரூர் இடையே  போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இவ்வழியே செல்ல வேண்டிய வாகனங்கள் மேல்  ரோடு என அழைக்கப்படும் வந்தவாசி சாலையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

இந்நிலையில்  மாகரல் அருகே செய்யாற்றில் தரைப்பாலத்தை தற்காலிகமாக அமைக்க, உத்திரமேரூர்  நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்காக வீராணம்  தண்ணீரை சென்னைக்கு கொண்டு வர பயன்படுத்தப்பட்ட சிமென்ட் பைப்புகளில்,  மீதமுள்ளவை இங்கு கொண்டு வரப்பட்டுள்ளது. செய்யாறு தரைப்பாலத்தை சீரமைக்க பழைய குழாய்களை பயன்படுத்துவதற்கு மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் இவற்றை  பயன்படுத்தி இங்கு புதிய தரைப்பாலம் கட்டுவதா அல்லது உடைந்த பகுதிகளில்  மட்டும், ‘முதலுதவி’ செய்வதா என நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் ஆலோசித்து  வருகின்றனர்.செய்யாற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்ததும், உடைந்துபோன  தரைப்பாலம் அருகே, தற்காலிக சாலையை அமைத்து பஸ்கள் செல்லும் வகையில்  நடவடிக்கை எடுக்க வேண்டும். புதிய, தரமான தரைப்பாலம் அமைக்க வேண்டும் என 10க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வலியுறுத்தி  உள்ளனர்.

No comments