Disqus Shortname

போலீசார் - ஊராட்சி தலைவர் மோதல்; காவல் நிலையம் முற்றுகை

உத்திரமேரூர் செப்,26 :
  சாலவாக்கம் அருகே, மணல் கடத்தல் விவகாரத்தில்,
ஊராட்சி தலைவரும், போலீசாரும் மோதிக் கொண்டனர். காவல் நிலையத்தை, பகுதிவாசிகள் முற்றுகையிட்டதால், பரபரப்பு ஏற்பட்டது.

மணல் கடத்தல் : உத்திரமேரூர் ஒன்றியம், சாலவாக்கம் அருகே உள்ள கிடங்கரை மலை பகுதியில், மணல் கடத்தல் நடப்பதாக, போலீசாருக்கு நேற்று ரகசிய தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து, படாளம் காவல் ஆய்வாளர் தங்கவேல் தலைமையில், போலீசார் நேற்று பிற்பகல் 2:௦௦ மணிக்கு அப்பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது, கிடங்கரை சாலையில் மணல் கடத்தி வந்த லாரி ஒன்றை

பறிமுதல் செய்து, ஓட்டுனரை, சாலவாக்கம் போலீசார் கைது செய்தனர். இதுபற்றி தகவல் அறிந்த, சிறுபினாயூர் ஊராட்சி தலைவரும், லாரி உரிமையாளருமான கலையரசன், 35, சாலவாக்கம் காவல் நிலையத்திற்கு சென்று, போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, கைகலப்பு ஆனது. ஆய்வாளர் தங்கவேலை, கலையரசன் தாக்கியதாக கூறப்படுகிறது.

தள்ளுமுள்ளு : இதனால் ஆத்திரமடைந்த போலீசார், கலையரசனை தாக்கியுள்ளனர். இதற்கிடையில், ஊராட்சி தலைவர் கலையரசன் மீது, தாக்குதல் நடத்தியதை கண்டித்து, அவரது உறவினர்கள் மற்றும் சிறுபினாயூர் பகுதிவாசிகள், 200க்கும் மேற்பட்டோர், சாலவாக்கம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனர்; கலையரசனை பார்க்க, காவல் நிலையத்திற்குள் செல்ல முயற்சித்தனர். இதனால், போலீசாருக்கும், சிறுபினாயூர் பகுதிவாசிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. தகவலறிந்த மதுராந்தகம் காவல் துணை கண்காணிப்பாளர் ராஜேந்திரன், செங்கல்பட்டு கூடுதல் கண்காணிப்பாளர் ஜார்ஜ், செங்கல்பட்டு தாலுகா காவல் ஆய்வாளர் ருத்மாங்கன் உள்ளிட்டோர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை தொடர்ந்து, பகுதிவாசிகள் கலைந்து சென்றனர்.

தாக்குதலில் படுகாயமடைந்த கலையரசன் மற்றும் படாளம் காவல் ஆய்வாளர் ஆகியோரை, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அசம்பாவிதம் நிகழாமல் இருக்க, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.போலீசாருக்கும், சிறுபினாயூர் கிராமவாசிகளுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால், சாலவாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments