Disqus Shortname

புது வாழ்வு திட்டப்பணிகளை ஆய்வு செய்த உலக வங்கி தலைவர்

உத்தரமேரூர் ஜூலை.24-

காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் செயல்பட்டு வரும் புது வாழ்வு  திட்டப்பணிகளை உலக வங்கித்தலைவர் ஜிம் யங் கிம் மற்றும் அவரது குழு  வினர் ஆய்வு செய்தனர். காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை ஊராட்சியில் உள்ள  மக்கள் அமைப்புகளான, கிராம வறுமை ஒழிப்பு சங்க நிர்வாகிகள், சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு பிரதிநிதிகள், ஒத்த தொழில் குழு உறுப்பினர்களுடன் கலந்துரையாடினர். புது வாழ்வு திட்டம் மூலம் நிதி உதவி, திறன் வளர்ப்பு ஆகிய பயன்கள் பெற்று மக்கள் தமது வாழ்வில் முன்னேறி உள்ளதையும், தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சி இம்முன்னேற்றத்திற்கு அடிகோலியது என்பதையும் கேட்டறிந்தனர். புதுவாழ்வு திட்டத்தின் செயல்பாடுகள், அமைப்புகளின் இணையதள தகவல் மேலாண்மை ஆகியவை பெண்களின் முன்னேற்றத்தை எளிதாக்கியுள்ளது என பாராட்டினார். ஆய்வில் உலக வங்கித்தலைவர் ஜிம் யங் கிம் மற்றும் உலக வங்கி இயக்குனர் ஒனோரூல், உலக வங்கியின் இந்திய இயக்குனர் செர்ஜ டிவீயஸ், பன்னாட்டு நிதிக்கழக அதிகாரி சோபா செட்டி, முதுநிலை ஊரக வளர்ச்சி வல்லுநர் சமிக் தாஸ் ஆகியோர் பங்கேற்றனர். இளைஞர் திறன் வளர்ப்பு மற்றும் வேலைவாய்ப்பு செயல்பாடுகளை, கண்டறிய இந்தியாவில் செயல்பட்டு வரும் டிரயம்ப் பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் பல்வேறு மாவட்டங்களை சார்ந்த புதுவாழ்வு திட்ட இளைஞர்களிடம் திட்டத்தின் மூலம் கிடைக்கப்பெற்ற பயன்கள் பற்றியும், பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புகளை பற்றியும் கேட்டறிந்தனர். இந்நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் 1,200 பணியாளர்களில் 674 இளைஞர்கள் திட்டத்தின் மூலம் பணி அமர்த்தப்பட்டுள்ளனர். புதுவாழ்வு திட்டம் இந்திய அளவில் மட்டுமின்றி, உலக அளவில் வாழ்வாதார முயற்சிகளுக்கு ஓர் முன்னுதாரணம் எனவும் பாராட்டினர். இதில் 10 பணியாளர்கள் மாற்றுத்திறனாளிகள் என்பதை கண்டு வியந்து பாராட்டினர். முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு பாராட்டுதல்களையும், நன்றியும் தெரிவித்தனர். இத்திட்டமானது தமிழகத்தில் 26 மாவட்டங்களில் உள்ள 120 பிற்படுத்தப்பட்ட வட்டாரங்களில் 4,174 கிராம ஊராட்சிகளில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. ரூ .1,667 கோடியில் செயல்படுத்தப்படும் இத்திட்டம் தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகள், பழங்குடியினர் நலிவுற்றோர் உள்ளிட்ட 9.6 லட்ச ஏழை குடும்பங்களை பயனடைய செய்து வருகிறது. இந்த ஆய்வின்போது, நிதி செயலாளர் உதயச்சந்திரன், புதுவாழ்வு திட்ட இயக்குனர் மைதிலி க.ராஜேந்திரன், பொருளாதார விவகாரங்கள் துறை துணை செயலாளர் பிரிஜேஷ் பாண்டே, மாவட்ட கலெக்டர் பாஸ்கரன், கூடுதல் திட்ட இயக்குனர் சஜீவனா, மாநில வல்லுநர்கள் காஞ்சீபுரம் மாவட்ட திட்ட மேலாளர் தனசேகர் உதவி திட்ட மேளாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர். படப்பை பகுதி பணியாளர்கள் விழாவிற்காக ஏற்பாடுகளை சிறப்பாக செய்திருந்தனர் முடிவில் படப்பை பகுதி அணித் தலைவர் மணிகண்டன் நன்றி கூறினார்.

No comments