Disqus Shortname

பராமரிப்பின்றி அச்சத்திற்குள்ளான அறிஞர் அண்ணா பூங்கா பராமரிப்புத் தொகை எங்கே சென்றது பொதுமக்கள் ஆவேசம்

காஞ்சிபுரம் ஜீன்.10


கடந்த தி.மு.க ஆட்சியில் பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு விழாவினையட்டி பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் தமிழகம் முழுவதும் நிறைவேற்றப்பட்டது. அதன்படி காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள நகராட்சிகள், பேரூராட்சிகள், ஊராட்சிகளில் எண்ணற்ற வளர்ச்சித் திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் உத்திரமேரூர் பேரூராட்சியில் சுமார் 1.1\2 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள “விளையாட்டு மற்றும் மனமகிழ்வு மன்றம்” அடங்கும்.  இத்திட்டம் செயல்படுத்தப்பட்ட தொடக்கத்தில் ஏராளமான மக்கள் இப்பூங்காவின் மூலம் பயனடைந்துள்ளார்கள். ஆனால் தற்போது இப்பூங்கா அடைந்துள்ள உருமாற்றத்திற்கு விஷ உயிரிகள் நிறைந்து, சுற்றியுள்ள பகுதிகளை அச்சுறுத்தி வருகிறது. அந்த அளவிற்கு அப்பூங்காக்களில் அமைக்கப்பட்டுள்ள அழகுச் செடிகள், மரக்கன்றுகள், புற்கள் போன்றவை எவ்வித பராமரிப்பும் இன்றி, கட்டுப்பாடற்று வளர்ந்து முற்புதற்களாக காட்சியளிக்கிறது. இன்றைய நிலையில் பூங்காக்களின் வாயிலை பார்க்கும் போது மிகவும் அடர்த்தியான, உள் செல்வதற்கு அச்சத்தை ஏற்படுத்தும் அளவிற்கு உருவெடுத்துள்ளது. இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் உரையாடியபோது, “பேரறிஞர் அண்ணா பிறந்த நாள் நூற்றாண்டு விழாவினையட்டி, உத்திரமேரூர் பேரூராட்சியில் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளது. மக்களின் நலனை கருத்தில் கொண்டு செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களும் வரவேற்க வேண்டிய ஒன்று.
இருந்தபோதிலும் பல லட்சக்கணக்கான தொகைகள் செலவழிக்கப்பட்டு தொடங்கி வைக்கப்படும் அத்திட்டங்களை, ஒருசில ஆயிரங்களை கொண்டு பராமரிக்க தவறிவிடுகின்றனர். இத்தவறின் ஒரு பக்கத்தை தான் இப்பேரூராட்சியில் அமைந்துள்ள பூங்காக்கள் எடுத்துக்காட்டுகிறது. அரசு 

ஒவ்வொரு திட்டத்தையும் உருவாக்கும் அதே சமயத்தில், அவற்றை பராமரிக்கவும் சிறுதொகை ஒதுக்கீடு செய்கிறது. அதேபோன்று இப்பூங்காக்களையும் பராமரிக்க குறிப்பிட்டத் தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கும். அதனால்தான் தொடக்கத்தில் ஒருசில மாதங்கள் சீராக பராமரிக்கப்பட்டு, பொதுமக்களின் பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனால் தற்போது இப்பூங்கா பராமரிப்பின்றி முற்புதற்களாக காட்சியளித்துக் 
கொண்டிருக்கிறது. இதனால் சுற்றியுள்ள தெருக்கள், வீடுகள், வீடுகளின் தோட்டங்களில் பல்வேறு விஷ உயிரிகள் நடமாடுகின்றன. அதனால் அருகில் விளையாடும் குழந்தைகள் எவ்வித பாதுகாப்புமின்றி, ஆபத்துக்களை எதிர்கொள்கின்றனர். மேலும் சிறு குழந்தைகளின் விளையாட்டு மற்றும் பொதுமக்களின் மனமகிழ்ச்சிக்காக பயனடைய வேண்டிய அப்பூங்கா, ஒருசில தகுதியற்ற மனிதர்களின் சிற்றின்பத்திற்கு ஆளாகி உள்ளது. இந்நிலைக்கு காரணம் முறையற்ற பேரூராட்சி நிர்வாகமே. பூங்கா பராமரிப்பின்றி இருக்கும் நிலையில் எங்களுக்கு ஒரு சந்தேகம் உதித்துள்ளது. அரசு இப்பூங்காவை பராமரிக்க நாள், வாரம் மற்றும் மாதம் தோறும் ஒரு குறிப்பிட்ட தொகை கட்டாயம் ஒதுக்கீடு செய்திருக்கும். ஆனால் ஒரு பைசா கூட செலவழிக்க யோசிக்கும் பேரூராட்சி நிர்வாகம், பராமரிப்புக்காக ஒதுக்கீடு செய்யப்படும் அத்தொகையை என்ன செய்கிறது.
இதுகுறித்து தலைமையிடத்தில் உள்ள சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் “விளையாட்டு மற்றும் மனமகிழ்வு மன்றம்” அமைந்துள்ள இடத்தில் மாலை 6.00 மணிக்கு மேல் எந்தவொரு பெண்களும் குழந்தைகளும் செல்ல இயலாது. அந்த அளவிற்கு குடிபோதையில் அச்சுறுத்தும் நபர்கள் அங்கு அதிகம். இப்பூங்கா தொடங்கிய காலகட்டத்தில் மேற்படி நபர்களின் அட்டகாசம் தலைதூக்கி நின்றது. அதன்பிறகு அங்கு வரும் பொதுமக்களின் எண்ணிக்கையும் வெகுவாக குறைந்தது. தற்போது சரியான பராமரிப்பின்றி பூங்காவிற்கு வரும் ஒருசில பொதுமக்களும் முற்றிலும் நின்றுவிட்டனர். திட்டங்கள் பெயருக்காக தீட்டி, செயல்படுத்திவிட்டு, கண்டும் காணாதது போல் இருப்பது எந்தளவிற்கு சாத்தியம்” என கூறினர். ஒரு திட்டத்தை செயல்படுத்தும் போது, அத்திட்டம் செயல்படுத்தும் இடத்தின் சூழல், திட்டம் செயல்படுத்திய பின்பு அதற்காகும் பராமரிப்பு செலவுகள், பொதுமக்களின் பாதுகாப்பு வழிகள் என அனைத்தையும் அடிப்படையாகக் கொண்டு திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
ஆனால் பூங்கா பொதுமக்களுக்கு பாதுகாப்பில்லாத இடத்தில், பராமரிப்பின்றி இருப்பது, இத்திட்டம் சரியான வரையறைக்கு உட்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளதா? என்பது சந்தேகிக்க தோன்றுகிறது. இருந்தபோதிலும் தற்போது பொறுப்பேற்றுள்ள மாநில அரசும் அதற்கீழ்வுள்ள உள்ளாட்சி அமைப்பும் இதற்கு சரியான தீர்வுகாண வேண்டும். குறிப்பாக இப்பூங்கா பராமரிப்பின்றி இருக்கும் நிலையில், இத்திட்ட பராமரிப்பு செலவிற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள தொகையின் நிலை குறித்து ஆராய்ந்து பொதுமக்களின் பார்வைக்கு வெளிப்படுத்த வேண்டும். முடிவில் பூங்காவின் பராமரிப்பில் கோட்டைவிட்ட சம்பந்தப்பட்ட அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இனிவரும் காலத்தில் இதுமாதிரியான தவறுகள் நடைபெறாமல் இருக்க இந்நடவடிக்கை ஒரு முன் உதாரணமாக அமைய வேண்டும்

No comments