Disqus Shortname

பேருந்தில் சாகசம் செய்யும் மாணவர்கள்; அசம்பாவிதம் நடப்பதற்கு முன் நடவடிக்கை எடுக்க படுமா?

உத்திரமேரூர் ஜீலை.22
 பள்ளிக்கு பேருந்தில் செல்லும் மாணவர்கள் படிக்கட்டில் தொங்கிக் கொண்டே வருவதால் பெற்றோர் பீதி அடைந்துள்ளனர். கூடுதல் பேருந்துகளை இயக்கினால் இந்த பதற்றம் இருக்காது என்பது பெற்றோர்களின் கோரிக்கை. தமிழதத்தில் கடந்த மாதம் இரண்டாம் தேதி பள்ளிகள் விடுமுறை முடிந்து வழக்கம் போல் திறந்தன. பளளிகள் திறக்கப்பட்டு விட்டதால் வெளியூர் மற்றும் கிராமங்களில் இருந்து வந்து செல்லும் மாணவ, மாணவிகள் அரசு பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர். பழைய மாணவர்களை பொறுத்தவரை கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பஸ் பாஸை காட்டி பயணம் செய்து வருகின்றனர். காலையில் பள்ளிகளுக்கு வரவும், மாலையில் பள்ளி விட்டு செல்லவும் இவர்கள் குறிப்பிட்ட அரசு பஸ்சுக்கு நீண்ட நேரம் காத்திருந்து அதில் ஏற்கனவே பயணம் செய்யும் பயணிகளுடன் புத்தக பை, உணவு பொருட்களுடன் போட்டி போட்டு ஏறுகின்றனர். இந்த பஸ்சை தவற விட்டால் அடுத்த பஸ்சுக்கும் நீண்ட நேரம் காத்திருக்கும் நிலை உருவாகியுள்ளது. இதை தவிர்க்கவே ஒரே பஸ்சில் அனைவரும்
 ஒட்டுமொத்தமாக ஏறி பயணிக்கும் நிலை உள்ளது. இட நெருக்கடி காரணமாக சிலர் படிக்கட்டுகளில் தொங்கியப்படி ஆபத்தான பயணம் மேற்கொள்கின்றனர். வளைவில் திரும்பும்போது விபத்து நேரிடுமோ என உள்ளே இருப்பவர்களின் நெஞ்சம் பதைபதைக்கிறது. இந்த காட்சியை தினசரி காலை, மாலையில் காணலாம். மாணவர்களுக்கு போட்டியாக ஒரு சில பஸ்களில் மாணவிகளும் படியில் தொங்கி பயணிப்பதுதான் வேதனை. பலர் பஸ்சின் படிக்கட்டில் ஆபத்தை உணராமல் தொங்கி கொண்டு பயணம் செய்து வருகின்றனர். கடந்த ஆண்டு இதை கருத்தில் கொண்டு அரசு பஸ்சில் தொங்கி கொண்டு பயணம் செய்யும் மாணவர்களின் பெற்றோரை வரவழைத்து பள்ளி நிர்வாகம் எச்சரிக்கை செய்து அனுப்பியது. அண்டை மாநிலலத்தில் மாணவ, மாணவிகளை பொறுத்தவரை அவர்களுக்காக குறிப்பிட்ட நேரத்தில் தனி பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இதில் மாணவிகளுக்கு மட்டும் தனி பஸ் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு தமிழகத்திலும் மாணவ, மாணவிகளுக்கு தனி பஸ்கள் இயக்கினால் டிரைவர்களும், நடத்துனர்களும் பொறுப்பாக நடந்து கொள்ளுவார்கள். கிராமப்புற மாணவ, மாணவிகள் சரியான நேரத்தில் வீடு போய் சேர எதுவாக இருக்கும். அரசு இந்த திட்டத்தை விரைந்து அறிமுகப்படுத்த வேண்டும் என்று பெற்றோர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

No comments