Disqus Shortname

மூன்று குழந்தைகளைக் கொன்ற வழக்கில் தாய்க்கு ஆயுள் சிறை

உத்தரமேரூர் 06 July:
 உத்தரமேரூர் அருகே மூன்று குழந்தைகளைக் கிணற்றில் தள்ளி கொலை செய்த வழக்கில் தாய்க்கு ஆயுள் தண்டனை விதித்து காஞ்சிபுரம் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி பகுதியைச் சேர்ந்தவர் இஸ்மாயில் மனைவி ஜெரினா (36). இவர்களுக்கு தாஹீருல்லா (5) என்ற மகனும், இசரத் (3), யாஸ்மின் (1) ஆகிய இரு மகள்களும் இருந்தனர். கணவர் இஸ்மாயில் ஏற்கெனவே இறந்து விட்டார்.
இந்நிலையில் ஜெரினாவுக்கும், உத்தரமேரூரை அடுத்த குப்பைநல்லூரைச் சேர்ந்த அருளுக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டது. கடந்த 2013-ஆம் ஆண்டு   20.5.2013 இருவருக்கும் ஏற்பட்ட தகராறில் மனமுடைந்த ஜெரினா, நீரடி கிராமத்தில் உள்ள கிணற்றில் தனது மூன்று குழந்தைகளையும் தள்ளி கொலை செய்தார்.
பின்னர் அவரும் குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் ஜெரினா உயிருடன் மீட்கப்பட்டார். இதுதொடர்பாக உத்தரமேரூர் போலீஸார் வழக்குப் பதிவு விசாரணை மேற்கொண்டனர்.
இந்த வழக்கை விசாரித்த காஞ்சிபுரம் 2-ஆவது அமர்வு நீதிமன்ற நீதிபதி ஜி.கருணாநிதி, மூன்று குழந்தைகளை கொன்ற குற்றத்துக்காக ஜெரினாவுக்கு 3 ஆயுள் சிறைத் தண்டனையும், ரூ. 3,000 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்கவும் உத்தரவிட்டார். இந்த வழக்கில் அரசுத் தரப்பில் வழக்குரைஞர் கே.சம்பத் ஆஜரானார்

No comments