Disqus Shortname

பருவ மழைக் காலத்திலும் வறண்ட நிலையில் பாலாறு: ஆய்வு நடத்துமா அரசு?

உத்திரமேரூர் நவ,18
 காஞ்சிபுரம் மாவட்டத்தில் கனமழைக்கு ஊரே வெள்ளக்காடாக மாறி வரும் சூழ்நிலையில் கடந்த 15 ஆண்டுகளாக பாலாறு மட்டும் தண்ணீர் இல்லாமல் வறண்ட நிலையிலேயே இருக்கிறது. கர்நாடகத்தின் நந்திமலை (துர்க்கம்) பகுதியில் பாலாறு உற்பத்தியாகிறது. அம் மாநிலத்தில் 91 கி.மீ. தூரமும், ஆந்திர மாநிலத்தில் 45 கி.மீ. தூரமும் பயணிக்கிறது. பின்னர் தமிழகத்தின் எல்லைப் பகுதி புல்லூர் வழியாக 225 கி.மீ. தூரம் ஓடி காஞ்சிபுரம் மாவட்டம் வாயலூரில் கடலில் கலக்கிறது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர், திருவண்ணாமலை ஆகிய 5 மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்கி வந்தது பாலாறு. தற்போது கூட பாலாற்றில் குழாய் கிணறுகள் மூலம் எடுக்கப்படும் தண்ணீர்தான் நூற்றுக்கணக்கான கிராமங்களுக்கு குடிநீராக பயன்படுகிறது. ஆனால் இந்த பாலாற்றில் நீர் ஓடி 15 ஆண்டுகள் ஆகின்றன. இந்த பாலாற்றுக்கு தண்ணீர் வந்து சேரும் கிளை ஆறுகளில் போதிய நீர் வரத்து இல்லை. மேலும் கர்நாடக மாநிலத்தில் ஏரிகள் என்ற பெயரில் ஷட்டர் போட்டு தடுப்பணைகளை உருவாக்கியுள்ளனர். ஆற்றில் வரும் தண்ணீர் அங்கு நிரம்பினால்தான் தமிழகப் பகுதிக்கு வர முடியும் என்ற நிலை உருவாகிவிட்டது. மேலும் ஏரிகளில் இருந்து வெளியேறும் வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பால் அங்கிருந்தும் தண்ணீர் சரியாக வந்து ஆறுகளில் கலக்கவில்லை. இதனால்தான் மழை பெய்தாலும் பாலாறு வறண்ட நிலையில் இருப்பதற்கு காரணம் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். பாலாற்றில் அளவுக்கு அதிகமாக மணல் எடுக்கப்பட்டதால் தண்ணீர் ஓடாமல் ஆங்காங்கே குழிகளில் தேங்கி நிற்கிறது. ஆறுகளில் தண்ணீர் வந்தால் மணல் எடுப்பதில் சிரமம் இருக்கும் என்பதாலும், மணல் எடுக்கும் விவகாரத்தில் பல கட்சிகளைச் சேர்ந்த முக்கிய அரசியல் புள்ளிகள் சம்மந்தப்பட்டிருப்பதாலும், பாலாற்றில் தண்ணீர் வராதது குறித்து பெரிய அளவில் எதிர்ப்பு எதுவும் கிளம்புவதில்லை என்றும் கூறுகின்றனர். கடந்த 1995-ம் ஆண்டு கடைசியாக பாலாற்றுக்கு தண்ணீர் வந்தது. அதன் பிறகு பெய்த மழைக்களில் பாலாற்றுக்கு போதிய தண்ணீர் வரவில்லை. இந்த பாலாற்றுக்கு போதிய தண்ணீர் இல்லாமல் போனாதாலும், மணல் கொள்ளை அடிக்கப்பட்டதாலும், காஞ்சிபுரம் பகுதியில் கோடைக்காலங்களில் நிலத்தடி நீர் மட்டமும் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இது குறித்து பாலாற்று பாதுகாப்பு கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் காஞ்சி அமுதனிடம் கேட்டபோது, "பாலாற்றில் கலக்கும் கிளையாறுகளிலேயே போதிய தண்ணீர் வரவில்லை. கர்நாடகம் போன்ற இடங்களில் பெரிய ஏரிகள் வெட்டி பாலாற்று தண்ணீர் திருப்பி விடப்படுகிறது. அங்கு நிரம்பியது போகதான் இங்கு தண்ணீர் வரவேண்டும். பேதமங்கலத்தில் ஏரி என்ற பெயரில் ஷட்டர்கள் போட்டு தடுப்பணைகளை உருவாக்கியுள்ளனர். அந்த தடுப்பணை நிரம்பி ஒரு மாதம் ஆகிறது. பாலாற்றில் தண்ணீர் வராததற்கு அண்டை மாநில தடுப்பணைகள்தான் பிரதான காரணம்' என்றார் அவர்.

No comments