Disqus Shortname

உத்தரமேரூரில் விரைவில் "அம்மா' மருந்தகம்

உத்திரமேரூர் நவ,18
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல்பட்டு, உத்தரமேரூர் ஆகிய பகுதிகளில் விரைவில் கூட்டுறவு "அம்மா' மருந்தகங்கள் செயல்பட உள்ளதாக அமைச்சர் டி.கே.எம். சின்னையா தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட அளவிலான அனைத்திந்திய கூட்டுறவு வார விழா செவ்வாய்க்கிழமை காஞ்சிபுரத்தில் நடைபெற்றது.
ஆட்சியர் வி.கே. சண்முகம் தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினராக தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர் சின்னையா பேசியதாவது:
"வேளாண்மைப் புரட்சி ஏற்படுத்தும் வகையில் கடந்த 3 ஆண்டுகளில் 29,83,358 விவசாயிகளுக்கு ரூ. 12 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்டுள்ளது.
உரிய காலத்தில் திரும்ப செலுத்தும் விவசாயிகளுக்கு 7 சதவீத வட்டித் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
இதன் மூலம் ரூ. 384.65 கோடி மானியமாக கூட்டுறவுச் சங்கங்களுக்கு விடுவிக்கப்பட்டுள்ளது.
மக்கள் நலப் பணிகளில் கூட்டுறவு நிறுவனங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. மக்களுக்கு தரமான மருந்துகள் 10 சதவீத தள்ளுபடி விலையில் கிடைக்க 210 கூட்டுறவு மருந்தகங்கள் திறக்கப்பட்டன.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆலந்தூர் சட்டபேரவைத் தொகுதிக்குள்பட்ட நன்மங்கலத்தில் கூட்டுறவு "அம்மா' மருந்தகம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. செங்கல்பட்டு, உத்தரமேரூர் ஆகிய பகுதிகளில் விரைவில் கூட்டுறவு "அம்மா' மருந்தகங்கள் செயல்பட உள்ளன.
அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன' என்றார் அவர்.
இதைத் தொடர்ந்து, மாற்றுத்திறனாளிகளுக்கான கடன், மகளிர் சுய உதவிக்குழுக் கடன், சிறு வணிகக் கடன், வீட்டு வசதிக் கடன், கூட்டுப் பொறுப்புக் கடன், வீடு அடமானக் கடன், தாட்கோ கடன், கறவை மாட்டுக் கடன் என மொத்தம் ரூ. 1.70 கோடிக்கான கடன் உதவிகளை வழங்கினார்.
மேலும் கூட்டுறவு வங்கிகள், சிறந்த நியாய விலைக் கடைகள், சிறந்த கூட்டுறவுச் சங்கங்கள் என மொத்தம் 42 கூட்டுறவு நிறுவனங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவு இணைப் பதிவாளர் ராமச்சந்திரன், கூட்டுறவு ஒன்றியத் தலைவர் மணப்பாக்கம் மு. காமராஜ், காஞ்சிபுரம் மக்களவை உறுப்பினர் மரகதம் குமரவேல், சட்டப்ரேவை உறுப்பினர்கள் வி. சோமசுந்தரம், வாலாஜாபாத் பா. கணேசன், ராஜு, வி.என்.பி. வெங்கட்ராமன், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், காஞ்சிபுரம் நகர்மன்றத் தலைவர் மைதிலி திருநாவுக்கரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments