Disqus Shortname

சோதனைக்காக மன நோயாளிக்கு ஊசிப் போட்டு கொலை: 3 பேர் கொல்லப்பட்ட வழக்கில் புதிய தகவல்

சென்னைமே 07: உத்திரமேரூர் அருகே விஷ ஊசி போட்டு 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2 பேரின் சடலங்கள் போலீசார் முன்னிலையில், மறுபிரேத பரிசோதனைக்காக மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. சென்னை ஈஞ்சம்பாக்கம் அனுமன் காலனியை சேர்ந்தவர் ஸ்டீபன் (46). இவரது மனைவி மேரி ரோஸ்லின் (37). தம்பதிக்கு குழந்தை இல்லை. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். கடந்த மாதம் 4ம் தேதி நீலாங்கரை போலீசில் ஸ்டீபன் ஒரு புகார் மனுவை கொடுத்தார். அதில், ''தனது வீட்டில் 120 சவரன், சொத்து பத்திரங்கள் கொள்ளை போய்விட்டதாக'' கூறப்பட்டிருந்தது. புகாரின்பேரில் போலீசார் நடத்திய விசாரணையில், ஸ்டீபனிடம் வேலை செய்து நின்றுவிட்ட கொட்டிவாக்கத்தை சேர்ந்த பாலாஜி (32), ஆனந்தன் என்கிற முருகானந்தம் (27), சதிஷ்குமார் (27), ஆகியோர் திருடியது தெரியவந்தது. போலீசாரின் தொடர் விசாரணையில் ஸ்டீபன், பாலாஜி, ஆனந்தன் என்கிற முருகானந்தம், சதிஷ்குமார் ஆகிய 4 பேரும் சேர்ந்து 3 பேரை விஷ ஊசி போட்டு கொலை செய்த திடுக்கிடும் தகவல் வெளியானது. இதையடுத்து போலீசார் கடந்த 27ம் தேதி 4 பேரையும் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். கொலையாளிகள் அளித்த திடுக்கிடும் வாக்குமூலம் பின்வருமாறு:
ஸ்டீபனுக்கு மனைவி மேரி ரோஸ்லின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டது. இதனால் இருவருக்கும் இடையே ஏற்பட்ட தகராறில், மேரி ரோஸ்லின் கோபித்துக்கொண்டு அருகிலுள்ள மானம்பதி கண்டிகையில் உள்ள தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவரது அண்ணன் ஜான் பிலோமின்ராஜ் (47) ஸ்டீபனை கண்டித்துள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
முதல் கொலை:
ஆத்திரம் அடைந்த ஸ்டீபன் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்த ஜான் பிலோமின்ராஜை மடக்கி பாலாஜி, ஆனந்தன் என்கிற முருகானந்தம், சதிஷ்குமார் ஆகியோர் உதவியுடன் விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார்.  
இரண்டாவது கொலை:
உத்தரமேரூர் அடுத்த ஆரோக்கியபுரம் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர் (39). பஜார் வீதியில் பேன்சி ஸ்டோர், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வந்தார். இவரது மனைவி செல்வி (35). தம்பதிக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மனைவி இல்லாமல் தனியாக இருந்த ஸ்டீபன் செல்வியுடன் கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். அவரை சொந்தமாக்கிக்கொள்ள விரும்பிய ஸ்டீபன் பாலாஜி, ஆனந்தன் என்கிற முருகானந்தம், சதிஷ்குமார் ஆகியோர் உதவியுடன்  ஸ்ரீதரை விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார்.
மூன்றாவது கொலை:
கொலையான ஸ்ரீதர் மனைவி செல்வியின் அக்கா அமலா(37). இவரது கணவர் ஹென்றி (48). ஸ்டீபன் செல்வியுடன் பழகிக்கொண்டே, அவரது அக்கா அமலாவோடு கள்ளத்தொடர்பை ஏற்படுத்திக்கொண்டார். ஸ்டீபன் அமலாவையும் சொந்தமாக்கிக்கொள்ள விரும்பி பாலாஜி, ஆனந்தன் என்கிற முருகானந்தம், சதிஷ்குமார் ஆகியோர் உதவியுடன் ஹென்றியை விஷ ஊசி போட்டு கொலை செய்துள்ளார் என்று தெரியவந்துள்ளது.

 மீண்டும் விசாரணை: இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்ட 4 பேரை போலீஸார் மீண்டும் காவலில் எடுத்து விசாரித்தனர். இதில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் கிடைத்துள்ளன. அதன் விவரம்:
 போலீஸாரிடம் சிக்காமல், நூதனமான முறையில் கொலை செய்வது எப்படி என்பதை இணையதளம் மூலமே ஸ்டீபன் பார்த்து தெரிந்து கொண்டுள்ளார். இதில் விஷ ஊசி போட்டு கொலை செய்ய முடிவு செய்த ஸ்டீபன், அதற்கான விஷத்தை மும்பையில் இருந்து வாங்கியுள்ளார்.
 பின்னர், குடையின் நுனியில் ஊசியை வைத்து செலுத்தும்போது, அது சரியாக செயல்படுகிறதா என்பதையும் பரிசோதிக்க ஸ்டீபன் முடிவு செய்துள்ளார். அதன்படி தெருகளில் சுற்றித் திரிந்த நாய்களின் மீது ஊசியை போட்டுள்ளார். ஊசி போட்ட சில நிமிஷங்களில் நாய்கள் இறந்துள்ளன. அடுத்து மனிதர் மீது ஊசியை போட்டு பரிசோதிக்க அவர் முடிவு செய்தார்.
 மனநோயாளி கொலை: இதில், அந்தப் பகுதியில் ஆதரவற்று சுற்றித் திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒரு நபர் மீது ஸ்டீபன் குடையின் நுனியில் விஷ ஊசியை வைத்து செலுத்தினாராம். இதில் அந்த நபர் ஓரிரு நிமிஷங்களிலேயே, துடிதுடித்து இறந்ததை ஸ்டீபன் பார்த்ததாகக் கூறப்படுகிறது.
 இதன் பின்னரே அவர், தனது எதிரிகள் 3 பேரையும் அடுத்தடுத்து விஷ ஊசி மூலம் கொலை செய்துள்ளார்.
 இந்தச் சம்பவத்தில் மனநலம் பாதிக்கப்பட்டவர் கொலை செய்யப்பட்ட தகவல் போலீஸாருக்கு தற்போதுதான் தெரியவந்துள்ளது. இதையடுத்து ஸ்டீபன் கொலை செய்ததாகக் கூறப்படும் மனநல நோயாளி குறித்த விவரங்களை போலீஸார் சேகரித்து வருகின்றனர்.
 மறு பிரேத பரிசோதனை: இந்த வழக்கில் நெஞ்சு வலியின் காரணமாக இறந்ததாக கருத்தப்பட்ட ஜான் பிலோமினன், ஹென்றி, ஸ்ரீதர் ஆகியோர் கிறிஸ்தவர்கள் என்பதால் அவர்களின் சடலங்கள் புதைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
 இதையடுத்து வழக்குக்கான ஆதாரங்களையும், தடயங்களையும் சேகரிக்கும் வகையில் 3 பேரின் சடலத்தையும் மீண்டும் தோண்டியெடுத்து பிரேதப் பரிசோதனை செய்ய காவல்துறையினர் முடிவு செய்துள்ளனர். 3 பேரின் சடலங்களை மறு பிரேத பரிசோதனை செய்யும்பட்சத்தில், மேலும் பல முக்கியத் தகவல்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


 இந்நிலையில் கொலை செய்யப்பட்ட ஸ்ரீதரின் சடலம் பெருநகர் போலீசார் முன்னிலையில் நேற்று(07-05-2016) மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மறுபிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. அதேபோல, கொலை செய்யப்பட்ட ஜான் பிலோமின்ராஜின் சடலம் நீலாங்கரை போலீசார் முன்னிலையில் மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மறுபிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டது. மற்றொருவரின் உடலை போலீசார் தேடி வருகின்றனர். இதுகுறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

No comments