Disqus Shortname

டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவாக காஞ்சி மாவட்ட விவசாயிகள் பிச்சை எடுக்கும் போராட்டம்

காஞ்சிபுரம் ஏப், 13
காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கடந்த ஒரு மாத காலமாக டெல்லியில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், விவசாயிகளின் கோரிக்கைகளை செவிசாய்காத மத்திய அரசை கண்டித்து பொது மக்களிடம் விவசாயிகள் பிச்சை எடுத்து பிரதமருக்கு அனுப்பி நூதன முறையில் ஆர்பாட்டம் நடத்தினர்.
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் தமிழக விவசாயிகள் கடந்த 1 மாதமாக தமிழக விவசாயிகள் தேசிய வங்கிகளில் வாங்கிய பயிர்கடன்கள் முழுவதும் தள்ளுபடி செய்திட வேண்டும், முறையான வறட்சி நிவாரணம் வழங்க வேண்டும் விவசாயித்துக்கு தேவையான தண்ணீரை வழங்க ஏற்பாடுகள் செய்திட நதிநீர் இணைப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறித்தி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் எலிக்கறி சாப்பிடுவது, தூக்குப் போட்டுக்கொள்வது போல் கழுத்தில் கயிறுடன் நின்றல், மொட்டை அடித்து கொள்வது, அரை நிர்வாணம், முழு நிர்வாணம் என பல்வேறு நூதனமான முறையில் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் மத்திய அரசு எந்த வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து காஞ்சிபுரம் மாவட்டம் இயற்கை வேளாண் விழிப்புணர்வு சங்கம், அனைத்து பயிர்கள் சாகுபடி சங்கம், பாலாறு படுகை விவசாயிகள் சங்கம், ஒருங்கிணைந்து விவசாயிகள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நேற்று பிச்சை எடுக்கும் போராட்டம் நடத்தினர். போராட்டத்தில் இயற்கை வேளாண் விழிப்புணர்வு சங்கத் தலைவர் சோழனூர் மா.ஏழுமலை தலைமை தாங்கினார். பாலாறு படுகை விவசாயிகள் சங்க தலைவர் பூதூர் மணி, சிறப்புத் தலைவர் கிருஷ்ணன், அனைத்து பயிர்கள் சாகுபடி சங்க தலைவர் திருவேங்கடம், கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் சாலவாக்கம்உசேன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விவசாயிகள் தனஞ்செழியன், மாயகிருஷ்ணன் ஆகியோர் வரவேற்றனர். போராட்டமானது தாலுக்கா அலுவலக வளாகத்தில் துவங்கி மத்திய மாநில அரசுகளை கண்டித்து கோஷங்கள் எழுப்பியவாறு திருவோடில் கடைகளிலும் பொது மக்களிடமும் பேரூந்துகளிலும் பிச்சை எடுத்துக் கொண்டு பஜார் வீதி வழியாக ஊர்வலமாக வந்து அஞ்சலக அலுவலக வாளாகத்தில் மத்திய அரசை கண்டித்து ஆர்பாட்டம் நடத்தி முடித்தனர். பின்னர் பிச்சை எடுத்த ரூ .972 தொகையினை பிரதமருக்கு மணி ஆடர் செய்து தாங்கள் பிச்சை எடுத்த மண் பாத்திரங்களை கீழே போட்டு உடைத்தனர். இந்த போராட்டத்தில் விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர்.

No comments