Disqus Shortname

உத்திரமேரூர் அருகே பரபரப்பு : டாஸ்மாக் கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் சாலை மறியல்

உத்திரமேரூர் ஏப், 10

உச்சநீதி மன்ற உத்தரவையடுத்து பல்வேறு இடங்களில் டாஸமாக் கடைகள்
மூடப்பட்டது. இதில் உத்திரமேரூர் செங்கல்பட்டு மாநில நெடுஞ்சாலையில் உள்ள  கட்டியாம்பந்தல் கூட்ரோடில் இயங்கி வந்த அரசு டாஸ்மாக் கடை மூடப்பட்டது. இதையடுத்து அந்த கடையினை வேறு இடத்தில் அமைக்க தளவராம்பூண்டி கிராமப் புற  சாலையில் இடம் தேர்வு செய்யப்பட்டது. அங்கு கட்டிடப்பணி நடந்து வருகிறது.  இதனை எதிர்த்து தளவராம்பூண்டி கிராம மக்கள் ஒன்று கூடி கடந்த வாரம்  உத்திரமேரூர் வட்டாட்சியரிடம் மனு அளித்தனர். இதில் தளவராம்பூண்டி  கிராமப்புற சாலையில் டாஸ்மாக் கடை அமைந்தால் எங்கள் பகுதியிலிருந்து  பள்ளி மற்றும் கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர்களுக்கு பெரிதும்  பாதிக்கப்படுவர். மேலும் எங்கள் பகுதியிலிருந்து மறைமலைநகர் உள்ளிட்ட  பல்வேறு பகுதிகளுக்கு பெண்கள் பலர் வேலைக்கு சென்று வருகின்றனர். இங்கு  டாஸ்மாக் கடை அமைந்தால் எங்கள் பகுதி பெண்களுக்கு பாதுகாப்பு என்பது  கேல்விக்குறியாகிவிடும், எங்கள் பகுதி விவசாய நிலங்களில் மதுப்பிரியர்களால் போடப்படும் பிளாஸ்டிக் கழிவுகளால் பயிர்கள்  சேதமடையும், கால்நடைகள் பாதிக்கப்படும் அபாயமும் எற்படும். எங்கள்  கிராமத்திற்கு செல்ல இந்த ஒரு சாலை மட்டும் தான் உள்ளது. இதனால் இங்கு  கடை அமைக்கப்பட்டால் கிராமப்புற மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவர். மேலும்  கிராமத்திற்கு நடுவே வனத்துறைக்கு சொந்தமான இடங்கள் உள்ளது. அப்பகுதியிலும் பல்வேறு அசம்பாவிதம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே எங்கள்  பகுதியில் இந்த டாஸ்மாக் கடையினை அமைப்பதை தடுத்திட வேண்டும் என கோரிக்கை
விடுத்தனர். இந்நிலையில் கட்டிடப்பணியானது தொடர்ந்து நடைப்பெற்று வந்த  நிலையில்   செங்கல்பட்டு உத்திரமேரூர் சாலையில் தளவராம்பூண்டி
கூட்ரோடில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இந்த மறியல்
போராட்டத்தில் நூற்றுக்கணக்கான பெண்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். அரசு  அதிகாரிகள் வந்து எங்கள் பகுதியில் டாஸ்மாக் கடை அமைக்க மாட்டோம் என்று உறுதியளித்தபின் கலைந்து செல்வதாக கூறினர். அதற்குள்ளாக உத்திரமேரூர்  போலீசார் பொது மக்கள் மற்றும் பெண்கள் அனைவரையும் கலைத்தனர். இதில் தள்ளு  முள்ளு ஏற்பட்டதால் அங்கு பெரும் பரபரப்பு ஏறபட்டது. பின்னர்  வட்டாட்சியர் ராஜம்மாள் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சு  வார்த்தை நடத்தியதன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர்.
இச்சம்பவத்தால் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments