Disqus Shortname

உத்திரமேரூர் அருகே புதியதாக துவங்கப்பட்ட கல்குவாரிக்கு எதிர்ப்பு தெரிவித்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் குதித்த கிராம மக்கள்

உத்திரமேரூர் 20-12-2019
உத்திரமேரூர் அடுத்த பழவேறி கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில்
புதியதாக கல்குவாரி தொடங்க கடந்த செப்டம்பர் 13 ஆம் தேதி குவாரி
துவங்கப்பட்டது. இதையறிந்த கிராம மக்கள் குவாரிப்பணியினை தடுத்து
நிறுத்தினர். இதைத் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம், கிராம சபை
புறக்கணிப்பு என பல்வேறு போராட்டங்கள் நடத்தி மாவட்ட ஆட்சியர் உட்பட
பல்வேறு அலுவலர்களுக்கு பழவேறி கிராமத்தில் கல்குவாரி அமைந்தால்
ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கி கூறி புதிய குவாரிக்கு தடைவிதிக்க
வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த வாரம் (14.12.2019)
சனிக்கிழமையன்று கல்குவாரி ஊழியர்கள் குவாரி துவக்க பணியில்
ஈடுபட்டனர். இதை கண்ட கிராம மக்கள் அங்கு சென்று முற்றுகையிட்டு
போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த சாலவாக்கம் போலீசார் மற்றும்
வருவாய் துறையினர் பழவேறி கிராம மக்கள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
ஆனால் கிராம மக்கள் கல்குவாரியின் பணிகளை நிறுத்தும் வரை போராடப்
போவதாக அறிவித்து, கிராம மக்கள் அனைவரும் வீடுகளை விட்டு
மலையடிவாரத்தில் உள்ள சுடுகாட்டில் தஞ்சமடைந்தனர். இரவு பகலாக
மூன்று நாட்கள் போராட்டம் தொடர்ந்தது. 3 வது நாள் போராட்டத்தில் பள்ளி
மாணவ-மாணவியர்கள் வகுப்புகள் மற்றும் தேர்வுகளை புறக்கணித்துவிட்டு
போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன் விளைவாக காஞ்சிபுரம் சார் ஆட்சியர்
சரவணன் சம்பவ இடத்திற்கு வந்து பொது மக்களிடம் பேச்சு வார்த்தை
நடத்தினார். அப்போது கிராம மக்கள் கல்குவாரிக்கு தடைவிதிக்காவிட்டால்
நாங்கள் போராட்டத்தை தொடர்வோம் என வலியுறுத்தினர். பின்னர்
கல்குவாரி துவங்க உள்ள இடத்தினையும் கிராமத்தையும் சார் ஆட்சியர்
பார்வையிட்டு தற்காலிகமாக கல்குவாரியினை நிறுத்தி வைப்பதாக
உறுதியளித்தார். இதையடுத்து கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டு
கலைந்து சென்றனர். இந்நிலையில் நேற்று (20.12.2019) மீண்டும் இந்த
கல்குவாரி துவங்கும் பணியானது போலீசார் பாதுகாப்போடு தீவிரமாக
நடைப்பெற்று வருகிறது. ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று முதல்
காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக
கிராமத்தில் அனைவரும் ஒன்று கூடி கிராமத்தில் உள்ள அம்மன் கோவில்
அருகில் போராட்டத்தில் குதித்துள்ளனர். இந்த போராட்டத்தில் பெண்கள்
குழந்தைகள் உட்பட பலர் கலந்து கொண்டு உண்ணாவிரதம் இருந்து
வருகின்றனர்.

No comments