Disqus Shortname

உத்திரமேரூர் கோவிலில் கிடைத்த தங்க ஆபரண நகைகள்: நீண்ட இழுபறிக்கு பின்னர் வருவாய் துறையினரிடம் ஒப்படைப்பு

உத்திரமேரூர்13/12/2020
 உத்திரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட 14 வது வார்டு குழம்பர கோவில் தெருவில் ஸ்ரீ குழம்பரேஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இக் கோவில் இரண்டாம் குலோத்துங்க சோழன் காலத்தில் கட்டப்பட்டது. புராதானமான இந்த கோவிலுக்கு பல இடங்களில் சொத்துக்கள் உள்ளது. இந்த கோவிலானது நீண்ட காலமாக பழுதடைந்து இடிந்துவிழும் நிலையில் இருந்தது. கோவில் அறநிலைத்துறை கட்டுப்பாட்டில் இல்லாததால், அப்பகுதியை சேர்ந்த இளைஞர்கள் சிலர் தினசரி காலை மற்றும் மாலை வேலைகளில் பூஜைகள் செய்து கோவிலை பராமரித்து வந்தனர். இக்கோவிலை புணரமைக்க அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக முயற்சித்து வருகின்றனர். இதற்கொன விழாக்குழுவினர் அமைத்து அவர்களின் உதவியோடு கோவிலை புணரமைக்க திட்டமிட்டனர். அதன்படி கடந்த வியாழக்கிழமையன்று கோவில் புணரமைக்கும் பணியானது துவங்கியது. இதற்கான கோவிலில் கணபதி ஹோம்ம், பாலாலயம் உள்ளிட்டவைகள் நடத்தப்பட்டது. பின்னர் கோவிலில் சீரமைக்கும் பணிக்காக இடிபாடுகள் அப்புறப்படுத்தப்பட்டு பள்ளங்கள் தோண்டப்பட்டது. இந்நிலையில் நேற்று மாலை கோவில் வாசல் பகுதியில் சுமார் 7 அடி ஆழம் வரை பள்ளம் தோண்டிய போது அங்கு ஒரு பெட்டி கிடைத்துள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் அதனை எடுத்து திறந்து பார்த்த போது அதில் பல லட்சம் மதிப்பிலான பழங்கால தங்க நாணயங்கள் மற்றும் தங்க ஆபரணங்கள் என சுமார் அரை கிலோ அளவிற்கு இருப்பது தெரியவந்தது. தகவலறிந்த உத்திரமேரூர் போலீசார் மற்றும் வருவாய்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் பூமியில் கிடைக்கும் அனைத்து பொருட்களும் அரசுக்கு சொந்தம் என்று கூறி அதை எங்களிடம் ஒப்படைக்கும் படி கூறி வட்டாட்சியர் வலியுறுத்தினார். இதில் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் வட்டாட்சியரை முற்றுகையிட்டு இதுவரை இக்கோவிலை புணரமைக்க அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. நாங்கள் அப்பணியில் ஈடுபட்ட போது நகைகள் கிடைத்தன. அவைகளை கோவிலுக்கு செலவிட பயன்படுத்துவோம்

அரசுக்கு தரமாட்டோம் என கூறினார். இதில் பேச்சுவார்த்தை தோல்வியடைந்த்தையடுத்து நேற்று காலை மீண்டும் காஞ்சிபுரம் ஆர்.டி.ஓ திவ்யா தலைமையிலான அரசு அலுவலர்கள் போலீசாருடன் சம்பவ இடத்திற்கு சென்று பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி தங்க ஆபரணங்களை ஒப்படைக்க வலியுறுத்தினர். அப்போது பொது மக்கள் நகைகளை ஒப்படைக்க வேண்டும் என்றால், எங்களுக்கு கோவில் கட்ட அரசு நிதி உதவி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். கோரிக்கையை ஏற்றுக் கொண்ட ஆர்.டி.ஓ திவ்யா நகைகளை ஒப்படைக்க வலியுறுத்தினார். பின்னர் பொது மக்கள் அந்த நகைகளை அரசு அலுவலர்களிடம் ஒப்படைத்தனர். பின்னர் அதை போலீசார் பாதுகாப்புடன் எடுத்து சென்ற போது வாகனத்தை முற்றுகையிட்டு தாங்கள் ஏற்றுக் கொண்ட கோரிக்கைகளை எழுத்து பூர்வமாக அளிக்க வேண்டும் என்று மீண்டும் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது போலீசார் அவர்களை பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் பொது மக்கள் கலைந்து சென்றனர். நீண்ட இழுபறிக்கு பின்னர் வருவாய் துறையினரிடம் ஒப்படைப்பு  இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

No comments