Disqus Shortname

அருங்குன்றம் கிராமத்தில் கல்குவாரி லாரிகள் சிறை பிடித்து கிராம மக்கள் சாலை மறியல்


உத்திரமேரூர் 21-11-2019
உத்திரமேரூர் அடுத்த அருங்குன்றம் கிராமத்தில் காலை மாலை வேலைகளில் கல்குவாரி லாரிகளை கிராம சாலையில் இயக்க எதிர்ப்பு தெரிவித்து கிராம மக்கள் லாரிகளை சிறைபிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
உத்திரமேரூர் அடுத்த அருங்குன்றம், மதூர், பொற்பந்தல், சிறுதாமூர், பினாயூர், பழவேரி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பல தனியார் கல்குவாரிகளும், கல் அறவை தொழிற்சாலைகளும் இயங்கி வருகின்றன. இந்த கல்குவாரிகளுக்கும், கல் அறவை தொழிற்சாலைகளுக்கும் சென்று வரும் கனரக லாரிகள் அருங்குன்றம், பழவேரி கிராப்புற சாலை வழியாக செங்கல்பட்டு, காஞ்சிபுரம், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகிறது. நாள் ஒன்றுக்கு நுற்றுக்கணக்கான வாகனங்கள் இந்த சாலை வழியே சென்று வருவதால், சாலை பழுதடைந்து ஆங்காங்கே பள்ளங்கள் தோன்றி குண்டும் குழியுமாக மாறியது மட்டுமின்றி புழுதிகள் உருவாகி சாலை முழுவதும் பரவி சாலையினை முற்றிலும் மறைத்து விடுகிறது. இதனால் சாலையில் செல்லும் இருசக்க வாகன ஓட்டிகள், பள்ளி கல்லூரி மாணவ-மாணவியர்கள் எதிரில் வரும் வாகனம் தெரியாமல் மிகவும் சிரமத்திற்குள்ளாகின்றனர். மேலும் இந்த புழுதியால் கிராமப்புற மக்களுக்கு சுவாசக் கோளாறு உள்ளிட்ட பாதிப்புக்குள்ளாகின்றனர். விவசாயிகளின் விவசாய நிலத்தில் பயிரிடும் பயிர்களில் புழுதி முழுவதும் படிவதால் விவசாயம் வெகுவாக பாதிக்கப்படுகிறது. இது குறித்து பல்வேறு அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகாரளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஆத்திரமடைந்த கிராம மக்கள் நேற்று அருங்குன்றம், திருமுக்கூடல் சாலையில் கல்குவாரி லாரிகளை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த சாலவாக்கம் போலீசார் மற்றும் வருவாய் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சாலை மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தன் பேரில் போராட்டம் கை விடப்பட்டது. இந்த போராட்டத்தால் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments