உத்திரமேரூரில் டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி!
உத்திரமேரூரில் டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் பலி! அழிசூர் கிராமத்தில் சோகம் – சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த மக்கள் கோரிக்கை
காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகே டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
அழிசூர் கிராமத்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு
உத்திரமேரூர் ஒன்றியம், அழிசூர் கிராமம் வடக்குத் தெருவைச் சேர்ந்த திருமுகத்தின் மகன் முருகேசன்.
காய்ச்சலால் பாதிக்கப்பட்ட முருகேசன், உத்திரமேரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி முருகேசன் உயிரிழந்தார்.
ஏற்கனவே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் பாதிப்பு
இதற்கிடையே, உத்திரமேரூர் பேரூராட்சிக்கு உட்பட்ட நூக்காலம்மன் கோவில் தெருவில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள அரசு மருத்துவமனையில் சுமார் ஒரு மாத காலம் சிகிச்சை பெற்று வீடு திரும்பியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தற்போது டெங்கு காய்ச்சலுக்கு வாலிபர் ஒருவர் உயிரிழந்துள்ள சம்பவம் அப்பகுதியில் மேலும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சுகாதாரப் பணிகளை தீவிரப்படுத்த கோரிக்கை
உத்திரமேரூர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கொசு ஒழிப்புப் பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். வீடுகள் மற்றும் தெருக்களில் தேங்கியுள்ள தண்ணீரை அகற்றுவதுடன், முறையான சுகாதாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
டெங்கு காய்ச்சல் பரவலைத் தடுக்க சம்பந்தப்பட்ட சுகாதாரத் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
UTR NEWS – உத்திரமேரூர் பகுதி செய்திகள் மற்றும் உள்ளூர் நிகழ்வுகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்.

No comments