உத்திரமேரூர்: டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்களுக்கு டாக்டர் பிரியதர்ஷினி வேண்டுகோள்!
உத்திரமேரூர்: மழைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், டெங்கு காய்ச்சலைத் தடுக்க பொதுமக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என உத்திரமேரூர் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது:
பொதுமக்கள் தாங்கள் வசிக்கும் குடியிருப்புகள் மற்றும் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். வீடுகளில் உள்ள குடிநீர்த் தொட்டிகள் மற்றும் தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை மூடி வைக்க வேண்டும். வாரத்திற்கு ஒருமுறையாவது தண்ணீர் சேமிக்கும் பாத்திரங்களை காலி செய்து நன்றாகச் சுத்தம் செய்ய வேண்டும்.
மேலும், குடியிருப்புகளில் மழைநீர் தேங்குவதற்கு காரணமாக இருக்கும் தேங்காய் சிரட்டைகள், பழைய டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் தேவையற்ற பொருட்களை அகற்ற வேண்டும். இதன் மூலம் கொசுக்கள் உற்பத்தியாவதைத் தடுக்க முடியும்.
மழைக்காலங்களில் பொதுமக்கள் முழுக்கை ஆடைகளை அணிய வேண்டும். கொசுவலைகள் மற்றும் பாதுகாப்பான கொசு விரட்டிகளைப் பயன்படுத்தி கொசுக்கடியிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
டெங்கு அறிகுறிகள் குறித்து விழிப்புணர்வு அவசியம்!
அதிக காய்ச்சல், கடுமையான தலைவலி, கண்களுக்குப் பின்புறம் வலி, தசை மற்றும் மூட்டு வலி, குமட்டல் உள்ளிட்ட அறிகுறிகள் தென்பட்டால், அவை டெங்கு காய்ச்சலின் அறிகுறிகளாக இருக்கலாம். எனவே, இத்தகைய அறிகுறிகள் இருப்பவர்கள் உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
மழைக்காலத்தில் சுற்றுப்புறத்தைத் தூய்மையாகப் பராமரிப்பதுடன், தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொண்டு, கொசு உற்பத்தியைக் கட்டுப்படுத்துவதில் பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைக்க வேண்டும். டெங்கு காய்ச்சலைத் தடுக்கும் வகையில் அனைவரும் விழிப்புணர்வுடன் செயல்பட்டு பாதுகாப்பாக இருக்க வேண்டும் என வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் பிரியதர்ஷினி கேட்டுக்கொண்டுள்ளார்.

No comments