உத்திரமேரூர் அருகே மின்னல் தாக்கி 12 ஆடுகள் பலி! சேத்துப்பட்டு கிராமத்தில் சோகம்
உத்திரமேரூர், காஞ்சிபுரம் மாவட்டம்: உத்திரமேரூர் அடுத்த பெருநகர் அருகே உள்ள சேத்துப்பட்டு கிராமத்தில் மின்னல் தாக்கியதில் 12 ஆடுகள் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மின்னல் தாக்கி 12 ஆடுகள் உயிரிழப்பு
சேத்துப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராணி (53), சேகர் (55) ஆகியோர் ஆடு வளர்ப்புத் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் வழக்கம்போல் தங்களுக்குச் சொந்தமான சுமார் 60 ஆடுகளை மேய்ச்சலுக்காக வயல்வெளிக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது திடீரென கருமேகங்கள் சூழ்ந்து, பலத்த இடி மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியுள்ளது. இதற்கிடையே ஆடுகள் மேய்ந்துகொண்டிருந்த பகுதியில் மின்னல் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
ராணிக்கு 5 ஆடுகள்; சேகருக்கு 7 ஆடுகள் பலி
இந்தச் சம்பவத்தில் ராணிக்குச் சொந்தமான 5 ஆடுகளும், சேகருக்குச் சொந்தமான 7 ஆடுகளும் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்தம் 12 ஆடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால், ஆடு வளர்ப்புத் தொழிலில் ஈடுபட்டுள்ள இருவருக்கும் இழப்பு ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தைக் கண்ட விவசாயி, அங்கிருந்த மற்ற ஆடுகளைப் பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.
போலீசார் விசாரணை
இந்தச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த பெருநகர் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments