Disqus Shortname

35 ஊராட்சிகளுடன் சாலவாக்கம் புதிய ஒன்றியம் செயல்பட துவங்கியது! 17 பணியிடங்கள் உருவாக்கி காஞ்சி கலெக்டர் உத்தரவு

 உத்திரமேரூர்: உத்திரமேரூர் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து,


சாலவாக்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும் என்ற பல ஆண்டுகால கோரிக்கை, தற்போது நடைமுறைக்கு வந்துள்ளது. 35 ஊராட்சிகளுடன் புதிய ஒன்றியம் செயல்பட முதற்கட்டமாக, 17 பணியிடங்களை உருவாக்கி காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தில், 73 கிராம ஊராட்சிகள் உள்ளன. சாலவாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த மக்கள், ஒன்றிய அலுவலகம் தொடர்பான பணிகளுக்காக, உத்திரமேரூர் செல்ல வேண்டியுள்ளது. சில கிராமங்களில் இருந்து இரண்டு பேருந்துகள் மூலம் மாறி மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளதால், பொதுமக்கள் அவதிப்பட்டு வந்தனர். இதனால், நிர்வாக வசதிக்காகவும், பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையிலும், உத்திரமேரூர் ஒன்றியத்தை பிரித்து, சாலவாக்கத்தை தலைமையிடமாக கொண்டு புதிய ஒன்றியம் அமைக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, உத்திரமேரூர் ஒன்றியத்தில் இருந்த 73 ஊராட்சிகளில், 38 ஊராட்சிகளை உத்திரமேரூர் ஒன்றியத்திலும், 35 ஊராட்சிகளை சாலவாக்கம் ஒன்றியத்திலும் இணைத்து, பிரிப்பதற்கான இறுதி அரசாணை, கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்டது.


அரசாணை

அரசாணை வெளியானதும், புதிய ஒன்றியத்திற்கான அலுவலகம், பணியாளர்கள் நியமனம் உள்ளிட்ட ஏற்பாடுகள் விரைவில் மேற்கொள்ளப்படும் என, சாலவாக்கம் பகுதி மக்கள் எதிர்பார்த்தனர். ஆனால், பல மாதங்கள் கடந்தும், புதிய ஒன்றியம் தனியாக செயல்படுவதற்கான அடிப்படை கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படாமல் இருந்தன. புதிய அலுவலக கட்டடம், அரசு அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம், நிர்வாக பயன்பாட்டிற்கான வாகனங்கள் ஒதுக்கீடு உள்ளிட்ட பணிகள் தொடங்காததால், அரசாணையில் மட்டுமே ஒன்றியம் உருவாக்கப்பட்டுள்ளதாக. அப்பகுதி மக்கள் அதிருப்தி தெரிவித்து வந்தனர். இதற்கிடையே, நாளையுடன் ஊராட்சி தலைவர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஒன்றிய தலைவர் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகளின் பதவிக்காலம் முடிவடைகிறது. இந்த சூழலில், சாலவாக்கம் ஒன்றியத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன.

முதற்கட்டமாக, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், பணி மேற்பார்வையாளர்கள், உதவியாளர்கள், கணினி ஆப்பரேட்டர்கள், ஓட்டுநர்கள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில், 17 பணியிடங்களை உருவாக்கி, காஞ்சிபுரம் கலெக்டர் சினேகா உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், சாலவாக்கத்தில் உள்ள தனியார் கட்டடத்தில் தற்காலிகமாக இயங்குவதற்கு ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. மேலும், உத்திரமேரூர் ஒன்றியத்தின் தற்போதைய வட்டார வளர்ச்சி அலுவலர்களான மாணிக்கவேலு, சாந்தி ஆகிய இருவரும், சாலவாக்கம் ஒன்றியத்திற்கும் கூடுதல் பொறுப்பில் வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணியாற்றுவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சாலவாக்கம் ஒன்றியம் தனியாக செயல்பட தொடங்குவதன் வாயிலாக, அப்பகுதியைச் சேர்ந்த 35 கிராம ஊராட்சிகளின் நிர்வாக பணிகள், வளர்ச்சி திட்டங்கள், குடிநீர் மற்றும் சாலை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை கண்காணிப்பது எளிதாகும். அரசு அலுவலக பணிகளுக்காக, உத்திரமேரூர் செல்ல வேண்டிய அலைச்சலும் குறையும் என்பதால், சாலவாக்கம் மற்றும் சுற்றியுள்ள கிராம மக்களிடையே நிம்மதி ஏற்பட்டுள்ளது.


எனினும், புதிய ஒன்றியத்திற்கான நிரந்தர அலுவலகம், தேவையான பணியாளர்கள், வாகனங்கள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் முழுமையாக ஏற்படுத்தப்படும் போது தான், அதன் நிர்வாக செயல்பாடுகள் தடையின்றி நடைபெறும் என, அப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

No comments

கமெண்ட் செய்ய கணக்கு தேவையில்லை. கீழே "Comment as" என்பதில் Name/URL அல்லது Anonymous தேர்ந்தெடுத்து, கமெண்ட் எழுதி PUBLISH அழுத்தவும்.