Disqus Shortname

உத்திரமேரூர் அருகே ரூ 10 லட்சத்தில் கட்டப்பட்ட புதிய குடிநீர் கிணறு சுற்று சுவரில் விரிசல்


உத்திரமேரூர் 24/08/ 2019 
உத்திரமேரூர் அடுத்த சடச்சிவாக்கம் கிராமத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர்  வசித்து வருகின்றனர். பல ஆண்டுகளுக்கு முன்பு கிராம மக்களுக்கு குடிநீர் தேவைக்காக  கிராமத்தில் ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டு மேல்நிலை நீர் தேக்கத்  தொட்டியில் நீர் ஏற்றி பைப் லைன் மூலம் குடிநீர் விநியோகிக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் கடந்த ஆண்டு பருவ மழை பெய்த்து போனதால் கிராமத்தில் கடும்  குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது. இதனால் குடிநீர் தேவைக்கு கிராம மக்கள் 2 கிலோ  மீட்டர் தொலைவில் உள்ள ஆலஞ்சேரி, தோட்டநாவல் உள்ளிட்ட கிராமங்களுக்கு
சென்று குடிநீர் கொண்டு வரும் நிலை ஏற்பட்டது. இதனால் கிராமத்திலேயே புதிய  குடிநீர் கிணறு அமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.  கோரிக்கையின் பேரில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் ரூ  10 லட்சம் மதிப்பில் புதியதாக திறந்தவெளி குடிநீர் கிணறு அமைக்க மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. அதனடிப்படையில் சில மாதங்களுக்கு முன் குடிநீர் கிணறு அமைக்கும்
பணியானது துவங்கி நடைப்பெற்று வருகிறது. பணி முழுமையாக முடிவடையாத நிலையில் நேற்று திடீரென கிணற்றின் சுற்று சுவர் விரிசல் ஏற்பட்டு கிணற்றை  சுற்றிலும் பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டது. இதைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி  ஆழ்ந்தனர். இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில் எங்கள் கிராமத்திற்கு குடிநீர் கிணறு அமைக்கும் பணி சில மாதங்களுக்கு முன்னர் தான் துவங்கியது. பணி முழுமையாக முடிவடையாத நிலையில் நேற்று சுற்று சுவரில் விரிசல் ஏற்பட்டது, அது மட்டுமின்றி  கிணற்றின் அருகே பெரிய அளவில் பள்ளம் ஏற்பட்டுள்ளது. மேலும் கிணறும் பெரிய  அளவில் ஆழமும் கிடையாது, இது போன்ற தரமற்ற பணியால் பொது மக்களின்  வரிப்பணம் வீனாவதுடன் பல்வேறு அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. கிராம  மக்களின் தேவைக்காக கிணறு அமைக்கப்படாமல் தங்களின் பணத் தேவைக்கு இது  போன்ற திட்டங்களை பயன்படுத்திக் கொள்கிறார்கள் சிலர். எனவே மாவட்ட நிர்வாகம்
தலையிட்டு இது போன்ற பணி மேற்கொள்ளும் ஆட்கள் மீது உரிய நடவடிக்கை எடுத்து எங்கள் கிராமத்தில் உள்ள குடிநீர் கிணற்றினை சீரமைத்திட வேண்டும் என கோரிக்கை  விடுத்தனர்.

No comments