Disqus Shortname

தர்பூசணி போதிய விளைச்சல் இன்றி விவசாயிகள் கவலை



உத்திரமேரூர் பிப்ரவரி 15 2017
கோடை காலம் வந்தால்,கோடை வெப்பத்தை தணிக்க அவ்வப்போது பழச்சாறு அருந்தி வெப்பத்தை தணிக்கிறோம். பழச்சாறு என்பது அனைவரும் அருந்த முடியாது. காரணம் பழங்கள் விலை உயர்வு தான். எனவே அவரவர் தகுதிக்கு ஏற்ப கோடை வெப்பத்தை தவிக்க பாடுபடுவார்கள்.அதன்படி பார்க்கும் போது ஏழை- எளியவர்களுக்கு மிகவும் குறைந்த விலையில் கிடைப்பது தர்பூசணி பழம் தான். கோடை காலம் தொடங்கி விட்டால் தர்பூசணி பழங்களுக்கான தேவை அதிகரித்து விடும். சமீப காலமாக மக்களிடம் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு காரணமாக உடலுக்கு கேடு விளைவிக்கும் சில வகையான குளிர்பானங்களை அருந்தாமல் இயற்கையான பழ வகைகளையே மக்கள் அதிகம் பயன்படுத்த தொடங்கி உள்ளனர்.  

கோடை காலம்

தற்போது கோடை காலம் தொடங்க உள்ளதால் உத்திரமேரூர்  மற்றும் காஞ்சிபுரம் மாவட்ட பகுதிகளின் சாலையோரங்களில் ஆங்காங்கே குடிசை அமைத்து தர்பூசணியை வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். இதை பொதுமக்கள் வாங்கி சாப்பிடுகின்றனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில்  உத்திரமேரூர் ,  ஆதவபாக்கம்  உள்பட பல்வேறு பகுதிகளில் தர்பூசணி பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது  தர்பூசணி சாகுபடி செய்யப்பட்டு உள்ள விவசாயிகள் பலர் இந்த ஆண்டு தர்பூசணி சரியான விளைச்சலும் இல்லை. அதே போன்று போதுமான விலையும் இல்லை என்று கூறுகின்றனர். 

இது குறித்து விவசாயி  வீரமணி அவர்கள் கூறியதாவது:-

காஞ்சிபுரம்  மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தர்பூசணி பழம் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. 60 நாட்களில் அறுவடைக்கு பழங்கள் தயாராகும். சொட்டு நீர் பாசனம் மற்றும் கிணற்று நீர் மூலம் தண்ணீர் பாய்ச்சுகிறோம். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு ஏக்கர் பயிரிட்டால் 10 டன் முதல் 15 டன் வரை தர்பூசணி சாகுபடி கிடைக்கும். ஆனால் தற்போது அது 6 டன் மூதல் 7 டன் வரை தான் கிடைக்கிறது. இதற்கு என்ன காரணம் என்று சரியாக தெரிய வில்லை. இருப்பினும் விதை தரமான விதை இல்லை என்பது தான் தற்போது கூற முடிகிறது. ஏன் என்றால் கடந்த காலங்களில் ஒரு தர்பூசணி பழம் 10 முதல் 15 கிலோ வரை எடை இருக்கும். ஆனால் தற்போது 5 கிலோ முதல் 7 கிலோ வரை தான் எடை இருக்கிறது. மேலும் தற்போது காய்கள் சிறுத்து விடுகிறது.

விலை குறைவு

நல்ல தரமானதாகவும், பெரிய அளவில் உள்ள பழங்கள் முன்பெல்லாம் ஒரு கிலோ ரூ.10முதல் ரூ.15 வரைக்கு விற்பனையாளர்கள் வாங்கி சென்றனர். ஆனால் தற்போது ஒரு கிலோ ரூ.9-க்கு தான் கேட்கிறார்கள். விதைகள் தரமானதாக இல்லாததால் பழங்கள் சிறுத்து காய்க்கிறது. இதனால் விற்பனையாளர்கள் சிறிதாக உள்ள பழங்களை அவர்கள் வாங்க தயக்கம் காட்டு கின்றனர். இதனால் வந்த விலைக்கு கொடுக்கும் நிலையில் உள்ளோம். மேலும் தண்ணீர் பற்றாக்குறையால் ஆழ் குழாய் கிணறு உள்பட பல்வேறு செலவினங்கள் செய்து தான் இந்த தர்பூசணி பழத்தை சாகுபடி செய்கிறோம். ஆனால் இந்த ஆண்டு எங்களுக்கு (விவசாயிகளுக்கு) போதுமான விளைச்சலும் இல்லை. போதுமான விலையும் இல்லை. இதனால் விவசாயிகளான நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். கடந்த காலங்களில் 100 சதவீதம் லாபம் கிடைத்து வந்தது. ஆனால் தற்போது கடன் வாங்கி பயிர் சாகுபடி செய்த அளவு கூட கிடைக்க வில்லை. ஒரு ஏக்கர் பயிர் சாகுபடி செய்து அதை அறுவடைக்கு கொண்டு வரும் வரை ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது. ஆனால் தற்போது செலவு செய்த பணமே கைக்கு வரவில்லை.எனவே தர்பூசணி பழங்கள் சாகுபடி செய்யும் விவசாயிகள் முன்னேற்றம் அடைய, இந்த பழங்களை வெளி மாநிலங்களுக்கும், வெளி நாட்டிற்கும் ஏற்றுமதி செய்யும் அளவில் அரசு நடவடிக்கை எடுத்தால் வாழ்க்கையில் முன்னேற்றம் அடைவோம். இவ்வாறு கூறினர்.

 களைகட்டும் தர்பூசணி விற்பனை

பனிக்காலம் முடியும் முன், தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. குளிர் வாட்டினாலும், தர்பூசணியை வாங்கி சுவைக்க பகுதிவாசிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.மார்ச் மாத துவக்கத்தில் விற்பனைக்கு வரும் தர்பூசணி பழங்கள், நடப்பாண்டில், பிப்., முதல் வாரத்திலேயே சந்தைக்கு வந்துள்ளன.பனிக்காலமான தற்போது குளிர் வாட்டி வதைத்து வருகிறது. காலை, 8:00 மணி வரை, பகுதிவாசிகள் வெளியில் நடமாட முடியாமல், வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். சூடான பானங்களை அருந்தி, உடலுக்கு கதகதப்பை ஏற்படுத்தி கொள்கின்றனர். ஆனால், 10:00 மணிக்கு மேல் நிலைமை தலைகீழாக மாறத்துவங்குகிறது. வெயில் தன் பங்குக்கு பகுதிவாசிகளை வதைக்க துவங்கி விடுகிறது.இதற்கு உபாயமாக,    உத்திரமேரூர் பகுதியில் தர்பூசணி பழங்கள் விற்பனைக்கு வந்துள்ளன. 
உத்திரமேரூரில் சாலையோரத்தில் தர்பூசணி கடைகள் போடப்பட்டுள்ளன. விற்பனையும் களைகட்டுகின்றன. ஒரு கிலோ, 15 ரூபாய் என, தர்பூசணி
விற்பனை செய்யப்படுகிறது. இரவு முதல் காலை வரை பனியால், 
பாதிக்கப்பட்டாலும், தர்பூசணியின் சுவைக்கு கட்டுப்பட்ட பகுதிவாசிகள், இயற்கை உணவை, தவிர்க்க மனமில்லாமல், அதை சாப்பிட்டு வருகின்றனர்.

No comments