Disqus Shortname

உத்திரமேரூரில் பனைமரங்கள் அழிப்பு: சூளைகளுக்காக வெட்டப்படும் பரிதாபம் அதிகாரிகள் கவனிப்பார்களா?

 உத்திரமேரூர் பிப்ரவரி 13 2017 ,
வறண்டு கிடக்கும் மண்ணிலும் வளர்ந்து நிற்கும், பஞ்சம் வந்தாலும் பசி தீர்க்கும் என மக்கள் மலைபோல் நம்புவது பனை மரத்தைதான். 'போரசசூ பிளாபெலிபேர்' என்ற தாவரவியல் பெயர் கொண்ட பனை மரம் 'பூலோக கற்பகதரு' என அழைக்கப்படுகிறது. வானம் பார்த்த பூமியில் ஏழை மக்களுக்கு வாழ்வு தருகிறது பனை மரம். தென்னையை போல, பனை மரத்தை உரம் போட்டு நீர் ஊற்றி வளர்க்கவேண்டியதில்லை. குளம், குட்டை, ஏரி, வாய்க்கால், பொட்டல் காடு, கல்லாங்கொத்து, கரட்டுமேடுகளில் பனை மரங்கள் பரவலாக காணப்படுகிறது. இந்திய அளவில் பனை மரங்களின் எண்ணிக்கை 11.55 கோடியாக உள்ளது. தமிழகத்தில் பனை மரங்களின் எண்ணிக்கை 5.10 கோடியாக இருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாக பனை மரங்கள் அழிப்பு அதிகரித்து விட்டது.
குறிப்பாக, பனைமர காடுகள் நிறைந்த உத்திரமேரூர் ஏரிக்கரை, வாய்க்கால், குளம், குட்டை உள்ளிட்ட பகுதியில் பனை மரங்கள் அதிகளவு வெட்டி அழிக்கப்படுகிறது. கடந்த 10 ஆண்டுகளில் 2.25 கோடி பனை மரம் வெட்டப்பட்டதாக தெரிகிறது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஆண்டுதோறும் சுமார் 50 ஆயிரம் பனை மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. 60 சதவீத பனை மரங்கள் பொதுப்பணித்துறை, வனத்துறை, வருவாய்த்துறை, உள்ளாட்சி நிர்வாகங்களுக்கு சொந்தமான இடங்களில் இருக்கிறது.
இவற்றை அனுமதியின்றி பலர் வெட்டி அகற்றி வருவதாக தெரியவந்துள்ளது. . காஞ்சிபுரம் மாவட்டத்தில் செங்கல் சூளை, திருப்பூர், ஈரோடு மாவட்டத்தில் உள்ள சாயப்பட்டறை, கேரள மாநிலத்தில் உள்ள ஆயில் நிறுவனம் ஆகியவை பனை மர விறகையே நம்பியே இருக்கிறது. கோவை கணுவாய், சோமையம்பாளையம், சோமையனூரில் உள்ள 400 க்கும் மேற்பட்ட செங்கல் சூளைகளில் ஆண்டுதோறும் சுமார் 60 ஆயிரம் டன் பனை மர விறகு பயன்படுத்துகிறார்கள். அடுத்த சில ஆண்டுகளில் பனை மரங்களை காண்பதே அரிதாகி விடும் நிலையிருக்கிறது. தமிழக அரசின் பனை வாரியம், பனை மரங்களை காக்க எந்த முயற்சியும் எடுக்கவில்லை. குளம், குட்டை, நீர் தேக்கங்களில் பனை மரம் நடும் திட்டமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி மரம் வளர்ப்போர் கூறுகையில், '' பனை மரங்கள் கருவேல் மரங்களைவிட எளிதாக தீப்பற்றி, நீண்ட நேரம் எரியும் தன்மை கொண்டது. சிலர், பனை மரங்களின் பயன் தெரியாமல் வெட்டி அழிக்கிறார்கள். 100 ஆண்டு கடந்தும் இந்த மரங்கள் அழியாமல் இருக்கும். எவ்வளவு வறட்சி இருந்தாலும் பனை மரங்கள் காய்ந்து போகாது. பனை தொழில் தற்போது முற்றிலும் அழியும் நிலையில் இருக்கிறது. பனங்கருப்பட்டி, பதநீர், பனை நுங்கு தொழில் செய்வோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது. பனை பொருட்களை பயன்படுத்துவோரும் அரிதாகவே இருக்கிறார்கள். தென்னை மரங்களை வளர்க்க அதிக செலவு ஏற்படுகிறது. ஆனால், பனை மரம் வளர்க்க உரம், தண்ணீர் என எதுவும் தேவையில்லை. மரங்களை வளர்க்காவிட்டால் பரவாயில்லை. வெட்டாமல் இருந்தாலே போதும். மீதமுள்ள பனைகளை பாதுகாக்க முடியும் '' என்றனர்.
வாழ வைக்கும் மரம்
ஒரு பனை மரம் 30 மீட்டர் முதல் 40 மீட்டர் வரை வளரும் தன்மை கொண்டது. 150 முதல் 160 ஆண்டு வரை பனை மரம் வாழும். எவ்வளவு வறட்சி இருந்தாலும், பனை மரத்தில் விளைச்சல் இருக்கும். பனை பழம் பாமாலின் எண்ணெய் தயாரிக்க பயன்படுத்தப்படுகிறது. ஒரு பனை மரத்தில் ஒரு ஆண்டிற்கு 140 லிட்டர் பதநீர், 24 கிலோ பனை வெல்லம், 8 முதல் 16 குலை நுங்கு, பெற முடியும். பனை மரத்தின் அனைத்து பாகங்களும் மனிதர்களுக்கு பயன்தருகிறது. பனை கிழங்கு, குருத்து நார்சத்து உணவாகும். பனை பொருட்கள் கூடை, கூரை, அலங்கார பொருள் செய்ய பயன்படுகிறது. பனை தொழிலை நம்பி, மாநில அளவில் சுமார் 1 லட்சம் தொழிலாளர்கள் இருந்தனர். தற்போது பனை மரம் ஏறும் தொழிலாளர்கள் அரிதாகி விட்டனர். பெரும்பாலான பனைமரங்களில் இருந்து பதநீர், நுங்கு எடுக்க ஆளில்லை.

தமிழகத்தின் அதிகார பூர்வ மரமான பனை மரங்களை பாதுப் பதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும்.தமிழகத்தின் சின்னமாக பனை மரம் உள்ளது. இந்த மரம் தமிழக கிராமங்களில் நிலங்களில் வரிசையாக காட்சியளிக்கும் பனை மரம் அதிக வறட்சி, மழை, வெள்ளம், என எந்த நிலையிலும் மிக செழிப்பாக வளரும் தன்மை யுடையது.கார்த்திகை தீப திருவிழாவின் போது கிராமங்களில் தொன்று தொட்டு சிறுவர், இளைஞர்கள் பனை மரத்தின் பூவை கொண்டு தயா ரிக்கப்படும் 'கார்த்தி' சுற்றி மகிழ்ச் சியடைவார்கள்.தென் மாவட்டங்களில் மக்கள் கருப்பெட்டி என அழைக்கும் மருத்துவ குணம் கொண்ட, 'பனை வெல்லத்தை தற்போது அனை வரும் பயன்படுத்தி வருகின்றனர். பனை மரத்திலிருந்து கிடைக்கும் பதநீர், நுங்கு உடல் சூட்டை தணிக்க வல்லது.இது இல்லாமல், கார்த்திகை மாதத்தில் அதிக அளவில் பஸ் நிலையங்கள் மார்கெட்டுகளில் விற்கப்படும் நார்சத்து நிறைந்துள்ள பனங்கிழங்கை அதிகம் பேர் விரும்பி சாப்பிடுகின்றனர்.இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த பனைமரங்கள் தற்போது செங்கல் சூளைக்கு அதிக அளவில் பயன்படுத்துவதற்காக அடியோடு வெட்டி தள்ளப்பட்டுள்ளது.இதனால் வருங்கால சந்ததியினருக்கு பனை மரம் பற்றியே அறிந்து கொள்ள முடியாத நிலை ஏற்படும்.தமிழகத்தின் சின்னமாக உள்ள பனை மரத்தை வெட்டாமல் அவற்றை பாதுகாப்பதற்கான நட வடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்பதே, சமூக ஆர்வ லர்களின் கோரிக்கையாக உள்ளது.

No comments