Disqus Shortname

உத்திரமேரூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவி பலி வாகனத்தை எரித்து கிராமவாசிகள் சாலை மறியல்

உத்திரமேரூர் பிப்ரவரி 07,
உத்திரமேரூர் அருகே லாரி சக்கரத்தில் சிக்கி 10-ம் வகுப்பு மாணவி பரிதாபமாக இறந்தார்.
இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள், லாரியை தீ வைத்து எரித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர்.

10-ம் வகுப்பு மாணவிகாஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியம் சித்தாலபாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் நீலகண்டன். இவருடைய மகள் பிரேமலதா(வயது 15). இவர், அருகில் உள்ள திருமுக்கூடல் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அதே ஊரை சேர்ந்த வடிவேலு என்பவரின் மகள் சாந்தினி(13). இவர், அதே பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வருகிறார்.

இவர்கள் இருவரும் ஒன்றாகவே பள்ளிக்கு சென்று வருவார்கள். நேற்று(06-02-2017) மாலை 5 மணியளவில் பிரேமலதாவுக்கு சிறப்பு வகுப்பு முடிந்து இருவரும் தங்கள் ஊருக்கு செல்ல பள்ளி முன் காத்து நின்றனர்.

லாரி சக்கரத்தில் சிக்கி பலி
அப்போது அந்த வழியாக வாலாஜாபாத்தைச் சேர்ந்த மாணிக்கம்(53) என்பவர் மோட்டார் சைக்கிளில் வந்தார். மாணவிகள் இருவரும் அவரது மோட்டார் சைக்கிளில் ஏறி தங்கள் ஊருக்கு சென்றனர்.

பள்ளியில் இருந்து சிறிது தூரம் சென்ற போது அவர்களுக்கு பின்னால் கல்குவாரியில் இருந்து வேகமாக வந்த லாரி இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர்.
இதில் சாலையில் விழுந்த மாணவி பிரேமலதா மீது லாரி சக்கரம் ஏறி இறங்கியது. லாரி சக்கரத்தில் சிக்கிய அவர் உடல் நசுங்கி, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார். மற்றொரு மாணவி சாந்தினி மற்றும் மாணிக்கம் இருவரும் படுகாயம் அடைந்தனர்.

அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து நடந்த உடன் லாரி டிரைவர் தப்பி ஓடி விட்டார்.

தீ வைத்து எரிப்புபள்ளி மாணவி பலியானதை அறிந்த திருமுக்கூடல் பகுதி பொதுமக்கள் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் விபத்துக்கு காரணமான லாரியை தீ வைத்து எரித்தனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்தனர்.

ஆனால் பொதுமக்கள் லாரியில் எரியும் தீயை அணைக்க விடாமல் தீயணைப்பு வாகனத்தை தடுத்து நிறுத்தி சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் லாரி முற்றிலும் எரிந்து நாசமானது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த செங்கல்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு மதிவாணன், இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ் (உத்திரமேரூர்), ருக்மாங்கதன் (சாலவாக்கம்) மற்றும் போலீசார் பொதுமக்களை சமரசம் செய்து பலியான மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க முயன்றனர்.

சாலை மறியல்அதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து, மாணவியின் உடலை அகற்ற விடாமல் தடுத்தனர். இந்த வழியாக கல்குவாரி லாரிகள் அதிவேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனால் பள்ளி மாணவி பலியாகி விட்டார். எனவே கல்குவாரி லாரிகளை மாற்றுப்பாதையில் செல்ல உத்தரவிடவேண்டும். உயர் அதிகாரிகள் வந்து எங்களிடம் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என தொடர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

No comments