Disqus Shortname

உத்திரமேரூரில் மாணவர்கள் திடீர் சாலை மறியல்!





சரியான நேரத்துக்கு பஸ் வராததை கண்டித்து உத்திரமேரூரில் மாணவர்கள், பொதுமக்கள் இன்று காலை திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. உத்திரமேரூரை சுற்றி 50க்கு அதிகமான கிராமங்கள் உள்ளன. இங்கிருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்பவர்கள், பணியின் காரணமாக காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ஸ்ரீபெரும்புதூர், சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு செல்பவர்கள் வசதிக்காக டி68 அரசு பஸ் செங்கல்பட்டு வரை இயக்கப்பட்டு வந்தது.






உத்திரமேரூரில் இருந்து செங்கல்பட்டு சென்று அங்கிருந்து பல்வேறு இடங்களுக்கு பயணிகள் செல்வார்கள். இன்று காலை உத்திரமேரூர் பஸ் நிலையத்தில் மாணவர்கள், பயணிகள் பஸ்சுக்காக காத்திருந்தனர்
. காலை 7.15, 7.45, 8.15 மணிக்கு வரவேண்டிய மூன்று பஸ்களும் வரவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பயணிகள், மாணவர்கள் பஸ் நிலையத்தில் அமர்ந்து கோஷம் எழுப்பினர். பின்னர் செங்கல்பட்டு சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தகவல் அறிந்ததும் உத்திரமேரூர் போலீசார் விரைந்து வந்தனர். முறையான நேரத்துக்கு பஸ் இயக்க வேண்டும். குண்டும் குழியுமான சாலையை சரி செய்ய வேண்டும். கூடுதல் பஸ் இயக்க வேண்டும். விசேஷ நாட்களில் வேறு வழித்தடங்களில் பஸ் இயக்குவதை தவிர்க்க வேண்டும்Õ என்று மக்கள் கோரிக்கை வைத்தனர். இது குறித்து உயர் அதிகாரிகளிடம் பேசி உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். இதில் சமாதானம் அடைந்தவர்கள் 1 மணி நேரத்துக்கு பிறகு கலைந்து சென்றனர். இந்த சம்பவம் உத்திரமேரூர் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

No comments