Disqus Shortname

உத்திரமேரூர் கருணை இல்லத்தில் ஆதரவளிப்பதாக தெரிவித்து முதியவர்களை கொன்று எலும்புகள் விற்பனை


சென்னை: சாப்பாடு, தங்க இடம் மற்றும் பாதுகாப்பு அளிப்பதாக கூறி அழைத்து வந்து, பட்டினிப்போட்டு கொலை செய்து, அவர்களின் உடலில் உள்ள எலும்பு உள்பட பல உடல் பாகங்களை இந்தியாவில் உள்ள தனியார் மருத்துவமனை மற்றும் வெளிநாடுகளில் உள்ள மருத்துவமனைக்கு கடத்தப்படுவதாக கருணை இல்லத்தின் மீது புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில், கருணை இல்லத்தில் 8 மணி நேரம் ஆர்டிஓ தலைமையில் அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.  சென்னை அடுத்த காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்த பாலேஸ்வரம் கிராம மலையடிவார பகுதியில் தனியார் தொண்டு நிறுவன அறக்கட்டளை சார்பில் கடந்த 7 வருடங்களாக செயின்ட் ஜோசப் கருணை இல்லம் 16 ஏக்கர் பரப்பளவில் தாமஸ் என்பவர் நிர்வகித்து வருகிறார்.

தற்போது இந்த கருணை இல்லத்தில் ஆண்கள், பெண்கள் என 369 பேர் தங்கியுள்ளனர். தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் இங்கு தங்கி வருகின்றனர். இதுதவிர, சமையல் செய்பவர்கள், முதியவர்களை பராமரிப்பவர்கள் உள்பட 30 பேர் பணிபுரிந்து வருகின்றனர். இந்த கருணை இல்லத்தின் கிளை தாம்பரம் அருகே உள்ள இரும்புலியூரில் உள்ளது. இந்தநிலையில், நேற்று முன்தினம் தாம்பரம் அடுத்த இரும்புலியூர் பகுதியில் செயல்பட்டு வரும் கருணை இல்லத்தில் விஜயகுமார்(75) என்பவர் இறந்ததாக கூறப்படுகிறது. இவரது சடலத்தை பாலேஸ்வரம் கொண்டு செல்ல கருணை இல்லத்திற்கு சொந்தமான ஆம்புலன்ஸில் ஏற்றி செல்லப்பட்டது. 

ஆம்புலன்ஸ் உத்திரமேரூர் அருகே எடையார்பாக்கம் காட்டு சாலையில் வந்து கொண்டிருந்த போது, வேனில் இருந்து அலறல் சத்தம் கேட்டது. சந்தேகம் அடைந்த அப்பகுதி மக்கள் வேனை துரத்தி மடக்கி பிடித்தனர். வேனில் விஜயகுமார் சடலத்துடன் காய்கறி மூட்டைகளும், திண்டுக்கல்லை சேர்ந்த செல்வராஜ்(72), திருவள்ளூரை சேர்ந்த அன்னம்மாள்(74) ஆகியோர் இருந்தனர். பிணத்துடன் பயணம் செய்ததால் பயத்தில் அலறியதாக அவர்கள் ெதரிவித்தனர். இதை தொடர்ந்து, கிராம மக்கள் சாலவாக்கம் போலீசாரிடம் அவர்களை ஒப்படைத்தனர்.  இதை தொடர்ந்து, போலீசார் மூதாட்டி அன்னாம்மாளிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது அன்னம்மாள்”  எனக்கு பயமாக உள்ளது. உடனே, எனது உறவினர் வீட்டிக்கு அனுப்பி விடுங்கள்’’ என்று அழுதப்படி கூறினார். 

இதையடுத்து, திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அன்னாம்மாளின் உறவினருக்கு தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, அவரது உறவினர்கள் அன்னாம்மாளை நேற்று முன்தினம் இரவே அழைத்து சென்றனர். செல்வராஜ் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்ததால் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதை தொடர்ந்து, ஆம்புலன்ஸ் ஒட்டுனர் ராஜேஷ் சடலத்தை பாலேஸ்வரம் கருணை இல்லத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட போது, அங்கு கூடியிருந்த மக்கள் ஆம்புலன்ஸ் வாகனத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து, சாலவாக்கம்- உத்தரமேரூர் சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தின் போது, ஆம்புலன்ஸ் மீது கல்வீசி தாக்கப்பட்டது. இதில், ஆம்புலன்சின் முன் கண்ணாடி சுக்கு நூறாக உடைந்தது.  சம்பவ இடத்துக்கு வந்த சாலவாக்கம் எஸ்ஐ கண்ணன், தாசில்தார் அகிலா தேவி மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதை தொடர்ந்து. அனைவரும் அங்கிருந்து கலைந்து சென்றனர். இதை தொடர்ந்து, ஆம்புலன்சில் பிணமாக இருந்த விஜயக்குமார், எலும்பு கூடுக்காக சாகடிக்கப்பட்டாரா, இயற்கையாக இறந்தாரா என்பது குறித்து ஆய்வு  செய்ய சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். 

இதை தொடர்ந்து, கண்ணாடி உடைப்பில் ஈடுபட்ட குரும்பறை கிராமத்தை சேர்ந்த கருணாகரன்(50), தாஸ்(42), சிலம்பரசன்(24) ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் கைது செய்தனர். சடலத்தை ஏற்றி வந்த ஆம்புலன்ஸ் பறிமுதல் செய்யப்பட்டது. ஓட்டுனர் ராஜேஷிடம் தீவிர விசாரணை நடத்திய பிறகு அவரை அனுப்பினர். இந்நிலையில், ேநற்று காலை 8 மணியளவில் ஆர்டிஒ ராஜூவ், மதுராந்தகம் டிஎஸ்பி மதிவாணன், மருத்துவ அலுவலர் உமாதேவி, மாசு கட்டுபாட்டு வாரியம், வருவாய் துறை, போலீசார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பாலேஸ்வரத்தில் உள்ள கருணை இல்லத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.விசாரணை மாலை 4 மணியளவில் முடிவடைந்தது. 

விசாரணைக்கு பிறகு, ஆர்டிஓ ராஜூ கூறுகையில், “துறைரீதியான அலுவலர்கள் 3 நாட்களுக்கு விசாரணை செய்து அறிக்கை தயார் செய்வார்கள். அந்த அறிக்கையின் அடிப்படையில் தவறு நடந்திருக்கும் பட்சத்தில் கருணை இல்லத்தின் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார். 
 இச்சம்பவத்தால், கலெக்டர் பொன்னையா உத்தரவுபடி மாவட்டம் முழுவதும் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் ஆய்வு செய்யப்பட்டன. 
இதற்கிடையே, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டசெல்வராஜிக்கு மனநல பிரிவு டாக்டர்கள் சிகிச்சை அளித்து கண்காணித்து வருகின்றனர்.

போலீசாரால் கைது செய்யப்பட்ட கருணாகரன் கூறியதாவது: சாலவாக்கத்தை அடுத்த பாலேஸ்வரம் மலையடிவாரப் பகுதியில் சுமார் 7 ஆண்டுகளுக்கும் மேலாக உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதில் இருந்தே அதன் செயல்பாடு மர்மமாக உள்ளது. 
 இந்த கருணை இல்லத்தில் இறந்தவர்களின் உடல்களை கிடங்கில் அறை போன்ற அமைப்பை ஏற்படுத்தி அதில் வைத்துவிட்டு அழுகி உடல் பாகங்கள் சிதைந்த பிறகு எலும்பை வெளிநாட்டுக்கு விற்பனை செய்துவருவதாக பொதுமக்கள் சொல்கின்றனர்.  எங்கிருந்தோ அழைத்துவரப்படும் முதியவர்களை சில காலம் வைத்திருந்து இறந்தவுடன் இங்கேயே அழுக விடப்படுகிறது. 

நோய்வாய்ப் பட்டவர்கள் உடல்கள் எரிக்கப்படுவதாலும், அழுக விடப்படுவதாலும் அருகில் உள்ள கிராம மக்களுக்கு இந்த நோய்த்தொற்று பரவி சுவாசக் கோளாறுகள் உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்படுகின்றன. இதுபோன்று அதிக அளவில் நடைபெறுவதால் சுற்றுச் சூழலில் பாதிப்பு ஏற்படுகிறது. இது சம்மந்தமாக பல்வேறு போராட்டங்கள் நடத்தியும் அரசும், மாவட்ட நிர்வாகமும் கண்டு கொள்வதாக தெரியவில்லை. எனவே, உடனடியாக ஆய்வு செய்து இந்தக் கருணை இல்லத்தை தடை செய்வதுடன், நிர்வாகிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

No comments